ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ பன்வர் லால் ஷர்மாவின் மரணத்தால், ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கட்டடத்தைப் பற்றிய மர்மம் தொடர்பான பேச்சுகள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கட்டடத்தின் ஒரு பகுதி, முன்பு சுடுகாடாக இருந்த இடத்தில் கட்டப்பட்டதால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்ட இந்த கட்டடத்தின் மீது பல விதமான மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.
இதையும் படிக்க | பழனி - கொடைக்கானலுக்கு ரோப் காா்: அறிய வேண்டிய அனைத்து தகவல்களும்
இந்த மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் ஆணிவேராக அமைந்தது, 2002ஆம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கிஷண் மோத்வானியின் மரணம்தான்.
இந்த மரணத்துக்குப் பிறகு, ராஜஸ்தான் சட்டப்பேரவை இதுவரை ஒரு முறை கூட அதன் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையான 200 என்ற எண்ணிக்கையுடன் செயல்படவே இல்லை என்கிறது மூட நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் புள்ளிவிவரங்கள்.
அது மட்டுமல்ல, கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து நான்கு ஆண்டுகளில் மட்டும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மரணமடைந்துவிட்டனர். மாஸ்டர் பன்வர்லால் மேக்வால், கைலாஷ் திரிவேதி, கஜேந்திர சிங் ஷெகாவத், பன்வர்லால் ஷர்மா, கிரண் மகேஷ்வரி, கௌதம் லால் மீனா ஆகியோர் மரணமடைந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
இவர்களது மரணங்கள் எல்லாம் சப்தமில்லாமல் எழுப்பிய சர்ச்சையை, கடந்த ஞாயிறன்று ஏழுமுறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் ஷர்மாவின் மரணம் லேசாக சுண்டிவிட்டுவிட்டது. மீண்டும் அங்குச் சுற்றி இங்குச் சுற்றி, ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கட்டடம் தொடர்பான மூட நம்பிக்கை பேச்சுக்களை பலரும் காதோடு காது வைத்துப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்எல்ஏவாக இருந்த கல்யாண் சிங் திடீரென மரணமடைந்தபோது, பேய், அபசகுணம், மோசமான கட்டடம், சுடுகாடு இருந்த இடத்தில் கட்டிய கட்டடம், எதிர்மறை ஆற்றல் என்பது உள்ளிட்ட பேச்சுகள் எழுந்தன. அதனூடே சேர்ந்து, ராஜஸ்தான் பேரவையில் யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தன.
ஆனால், தற்போது, பன்வர்லால் ஷர்மா நீண்ட காலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவர் இறந்ததற்கும் இந்த ராஜஸ்தான் பேரவைக் கட்டடம்தான் காரணம் என்று கூறி, அந்த மூட நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டப் பார்க்கிறார்கள் சிலர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்டடத்தை சுற்றும் மர்மம் விலகப்போவது எந்நாளோ?