
காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் கார்கேவுக்கு கிடைக்கும் வரவேற்பு தனக்கு கிடைப்பதில்லை என்று சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் தலைவர் வேட்பாளருமான சசி தரூர் தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 'மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் பலர் மல்லிகார்ஜுன கார்கேவை வரவேற்கின்றனர். ஆனால், என்னை வரவேற்பதில்லை. அவருக்கு வழங்கப்படும் மரியாதை எனக்குத் தருவதில்லை. ஆனால், அதை நான் குறை கூறவில்லை.
ஏனெனில் தேர்தலில் ஒரு சாதாரண காங்கிரஸ் நிர்வாகியின் வாக்குக்கும் மூத்த தலைவரின் வாக்குக்கும் சம மதிப்பு உண்டு என்பது எனக்குத் தெரியும். அதனால், இந்த வரவேற்பு ஒன்றும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. ஆனால், இருவருக்குமான போட்டித் தளத்தில் வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில், கமிட்டித் தலைவர்களை அணுகவே எங்கள் பிரதிநிதிகள் சிரமப்படுகின்றனர். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் கூறவில்லை.
இதையும் படிக்க | காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?
கடந்த 22 ஆண்டுகளாக தேர்தல் நடக்காததால் சில தவறுகள் நடக்கின்றன. தேர்தல் நடத்தும் மிஸ்திரி சஹாப் மற்றும் அவரது குழு, சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன்' என்று கூறியுள்ளார்.
வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இருவரும் தங்களுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.