
துருக்கியின் பர்டின் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா கூறுகையில்,
அமஸ்ரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த வெடிப்பு சுமார் 300 மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
படிக்க: இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமே வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.
சுரங்க விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
2014ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 301 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.