
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள் என சசி தரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. தேர்தலில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.யும் காங்கிரஸ் தலைவர் வேட்பாளருமான சசி தரூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே!
அதில், 'இன்றைய நாள் உண்மையில் உள்கட்சியில் ஒரு ஜனநாயக நாள். 9,500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற தேர்தலில் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது கெளரவம், பெரிய பொறுப்பு. அந்த பணியில் கார்கே வெற்றி பெற வாழ்த்துகிறேன். காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்சியை மேம்படுத்துவோம். தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்களுக்கும் தேர்தலுக்காக பணியாற்றியவர்களுக்கும் வாழ்த்துகள்.
25 ஆண்டுகளாக கட்சியை வழிநடத்தி தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் சோனியா காந்திக்கு நாங்கள் மிகப்பெரிய கடன்பட்டுள்ளோம். கடினமான காலங்களில் அவர் கட்சியை வழிநடாத்தியமைக்கு அவருக்கு தலைவணங்குகிறேன். அவர் தொடர்ந்து கட்சியை வழிநடத்த உதவ வேண்டும். புதிய தலைவர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
சுதந்திரமான, நடுநிலையான காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த தங்களால் இயன்ற உதவி செய்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு எனது நன்றிகள்.
நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் தனி இடம் பிடித்துள்ளது. இந்த தேர்தலின் மூலமாக எப்போதும் இந்த இடம் இருக்கும். மேலும் இந்த தேர்தலின் மூலமாக கட்சி இன்று புத்துயிர் பெற்றுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
It is a great honour & a huge responsibility to be President of @INCIndia &I wish @Kharge ji all success in that task. It was a privilege to have received the support of over a thousand colleagues,& to carry the hopes& aspirations of so many well-wishers of Congress across India. pic.twitter.com/NistXfQGN1
— Shashi Tharoor (@ShashiTharoor) October 19, 2022