திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே திறக்கப்பட்ட தொங்கு பாலம்: 141 பேரை பலிவாங்கத்தானோ?

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் விபத்துக்குள்ளான தொங்கு பாலம் திறப்பதற்கு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே திறக்கப்பட்ட தொங்கு பாலம்: 141 பேரை பலிவாங்கத்தானோ?
திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே திறக்கப்பட்ட தொங்கு பாலம்: 141 பேரை பலிவாங்கத்தானோ?


புது தில்லி; குஜராத் மாநிலம் மோர்பி நகரில் விபத்துக்குள்ளான தொங்கு பாலம் திறப்பதற்கு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 141 போ் உயிரிழந்தனா். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்ந்தது.

கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த அக். 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த பாலத்தில் புனரமைப்புப் பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. இந்த ஒப்பந்தப் பணி தொடங்கிய போதே, இந்த பாலம் அடுத்த 8 முதல் 12 மாதங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஏழு மாதங்களுக்குள் பாலம் திறக்கப்பட்டு, அங்கு வரும் பயணிகளிடம் ரூ.17 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

பாலத்தை திறக்கும் முன்பு, பாலத்தை புனரமைத்த தனியார் நிறுவனம் எந்த அனுமதியும் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதாவது, இந்த பாலத்தை புனரமைக்கும் ஒரேவா குழுமம், அதற்கு செலவிட்ட தொகையை பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும், 2037 வரை இந்த பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஒவ்வொரு பயணியும் ரூ.12 முதல் 17 வரை கட்டணம் செலுத்தி பாலத்தில் ஏறி தங்களது உயிரை இழந்துள்ளனர். 

தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

அதே வேளையில், பாலத்தை முழுமையாக சீரமைத்துவிட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

திட்டமிட்டதைக் காட்டிலும் மிக விரைவாக பாலத்தைத் திறந்தது ஏன் என்பதும், 141 பேரை பலிவாங்கத்தானோ என்றும் பலரும் அதிருப்தியுடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com