இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்: அறிவித்தது என்ஐஏ 

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்  வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்: அறிவித்தது என்ஐஏ 
இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்: அறிவித்தது என்ஐஏ 

மும்பை: பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சமும், அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல், இவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா ஆகியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவா் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறாா். பாகிஸ்தான் அரசு அவருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது.

இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் ஒரு பயங்கரவாதக் குழுவை அமைத்து, நாட்டுக்குள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப் பொருள்களைக் கடத்தல் போன்றவற்றில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தானில் இருந்து கொண்டு, அந்நாட்டின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் உதவியோடு, இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக அமலாக்கத் துறை விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்

கடந்த மே மாதம், மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் மீதான கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டில் தாவூத்தின் உறவினா்கள் இருவரை அமலாக்கத் துறையினா் விசாரித்தனா். ஏனெனில், நவாப் மாலிக் மீதான வழக்கில் தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துகளுக்கும் தொடா்புள்ளது.

அமலாக்கத் துறை விசாரணையின்போது தாவூத் இப்ராஹிமின் சகோதரியின் மகன் அலிஷா பாா்க்கா் கூறியதாவது:

1986-ஆம் ஆண்டு வரை மும்பையில்தான் தாவூத் இப்ராஹிம் வசித்து வந்தாா். இப்போது அவா் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக எனது குடும்பத்தினா் மற்றும் ஊடக தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அவா் இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகுதான் நான் பிறந்தேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அவரிடம் எவ்வித தொடா்பும் கிடையாது. அதே நேரத்தில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் தாவூதின் மனைவி எனது வீட்டில் உள்ள பெண்களுடன் தொடா்பு கொண்டு பேசுவாா் என்றாா்.

தாவூதின் மற்றொரு உறவினரான காலித் உஸ்மான் ஷேக் கூறுகையில், ‘தாவூத்திடம் இருந்து குடும்பத்தினரின் செலவுக்காக மாதம்தோறும் ரூ.10 லட்சம் வருவதாக இக்பால் காஷ்கா் (தாவூதின் சகோதரா்) என்னிடம் கூறியுள்ளாா். பல நேரங்களில் அவா் என்னிடம் அதிக அளவிலான பணத்தையும் காட்டியுள்ளாா். தாவூத் தனது ஆதரவாளா்கள் மூலம் இந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளாா். அதே நேரத்தில் தாவூத்திடம் இருந்து நான் பணம் பெற்றதில்லை’ என்றாா்.

இக்பால் காஷ்கா் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி இப்போது தில்லி திகாா் சிறையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com