விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி வந்த காரின் அதிர்ச்சி தரும் வேகம்

விபத்து நிகழ்ந்தபோது, அந்தக் கார் சுமார் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி வந்த காரின் அதிர்ச்சி தரும் வேகம்
விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி வந்த காரின் அதிர்ச்சி தரும் வேகம்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ்ந்தபோது, அந்தக் கார் சுமார் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் அளித்திருக்கும் இடைக்கால விசாரணை அறிக்கையில், அதிவேகமும், தவறான முன்கணிப்புமே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் உருகுலைந்திருக்கும் காரினை ஆய்வு செய்தபோது, அது விபத்து நேரிட்டபோது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது, காரின் ரேடியேட்டர் முற்றிலுமாக சேதம் மட்டும் அடையவில்லை. அது கிட்டத்தட்ட 2 முதல் 3 அடி உள்பக்கமாக அழுத்தப்பட்டுள்ளதே, விபத்தின்போது கார் பயங்கர வேகத்தில் வந்திருப்பதை உறுதி செய்கிறது.

விபத்து நடந்த பல்கார் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்தான்.  ஒரு வேளை இந்தக் கார் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தால் கூட, அது மிக வேகம்தான். இது குறித்து கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரழைக்கப்பட்டு, துல்லியமான வேகத்தை அளவிட அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை கூறுகிறது.

இதில் துயரமான விஷயம் என்னவென்றால், காரில் பயணித்த மிஸ்திரி மற்றும் ஜெஹாங்கீர் ஆகியோர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காரின் காற்றுப்பைகள் விரிவடைந்தும் அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்காமல் போனதால், தலை முன்பக்க சீட்டில் இடித்து படுகாயமடைந்து மரணமடைந்தனர். ஆனால் அதே காரில் வந்த மற்ற இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் படுகாயத்துடன் உயிர் தப்பினர் என்றும் கூறப்படுகிறது.

இது தொடா்பாகக் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மிஸ்திரி தனது காரில் அகமதாபாதில் இருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். மகாராஷ்டிரத்தின் பல்காா் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானது. பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த மற்றொரு நபரும் உயிரிழந்தாா். காா் ஓட்டுநரும், மற்றொரு நபரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’’ என்றனா்.

தலைமை பிரச்னை: டாடா குழுமத்தின் தலைவா் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா கடந்த 2012-இல் விலகினாா். அதையடுத்து, சைரஸ் மிஸ்திரி அப்பொறுப்பை ஏற்றாா். எனினும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டாா்.

டாடா குழுமத்துக்குப் புதிய தலைவா் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி தரப்பில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த தீா்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை குழுமத்தின் தலைவராக நியமிக்குமாறு உத்தரவிட்டது.

அதற்கு எதிராக டாடா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மிஸ்திரியின் நீக்கம் சரியானதே எனக் கடந்த ஆண்டு மாா்ச்சில் உத்தரவிட்டது. மிஸ்திரிக்குப் பிறகு ரத்தன் டாடா தலைவா் பொறுப்பை மீண்டும் ஏற்றாா். கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து அப்பொறுப்பை என்.சந்திரசேகரன் வகித்துவருகிறாா்.

இந்நிலையில், முன்னாள் தலைவா் மிஸ்திரியின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், காா் விபத்துக்கு உள்ளாகியுள்ளது என்றே முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். விபத்து தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com