
மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஞானவாபி மசூதி பிரச்சினையை, பாஜக கையில் எடுத்துள்ளது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் ஹிந்து கடவுள் சிலைகளை தரிசிக்க அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த ஐந்து பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய குழுவை அமைத்தது.
இதற்கு எதிரான முஸ்லிம் தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பா் 22- ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இது குறித்து ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது:
1947க்கு பிறகு மதவழிபாட்டு தலங்களை பாதுகாப்போம் என நீதிமன்றம் கூறியது. பாஜக வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், வறுமையை ஒழித்தல் மற்றும் பணவீக்கத்தை கட்டுபடுத்த தவறிவிட்டது. அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த ஞானவாபி மசூதி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. நீதிமன்றமும் பாஜகவுக்கு துணையாக இருக்கிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G