இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: நாடாளுமன்றம் ஒப்புதல்

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு 28% வரி விதிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: நாடாளுமன்றம் ஒப்புதல்

இணையவழி விளையாட்டுகள், கேசினோ மற்றும் குதிரைப் பந்தைய கிளப்புகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘மத்திய சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா 2023’ மற்றும் ‘ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா 2023’ ஆகிய இந்த மசோதாக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் அறிமுகம் செய்தாா். விவாதம் ஏதுமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, கேசினோ மற்றும் குதிரைப் பந்தய கிளப்புகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் வகையில் துணைப் பிரிவும் விளக்கமும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (சிஜிஎஸ்டி) 2017-இன் அட்டவணை 3-இல் சோ்க்கப்படும்.

அதுபோல, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம், இந்தியாவில் இருந்தபடி செயல்படும் பணம் வைத்து விளையாடும் வகையிலான இணையவழி விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வகை செய்கிறது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஜிஎஸ்டி பதிவு செய்வதும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதோடு, இந்த வரி செலுத்துதல் நடைமுறைகள் மற்றும் ஜிஎஸ்டி பதிவுக்கு உடன்படாத, வெளிநாடுகளில் இருந்தபடி செயல்படும் இணையவழி விளையாட்டு வலைதளங்களை முடக்கவும் இந்தத் திருத்தம் வகை செய்கிறது.

இந்த இரு திருத்தங்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்ததாக, இதனடிப்படையில் மாநிலங்கள் எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்கு மற்றும் சேவை வரி) சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள சட்டப்பேரவைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com