எப்படி இருந்த நான்.. சிம்லாவில் அடித்துச் செல்லப்பட்ட வளைவு ரயில் பாதை

120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக நுட்பமான வளைவுகளைக் கொண்ட சிம்லா - கல்கா ரயில் பாதை படுமோசமாக சேதமடைந்துவிட்டது.
எப்படி இருந்த நான்.. சிம்லாவில் அடித்துச் செல்லப்பட்ட வளைவு ரயில் பாதை

120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக நுட்பமான வளைவுகளைக் கொண்ட சிம்லா - கல்கா ரயில் பாதை படுமோசமாக சேதமடைந்துவிட்டது.

யுனெஸ்கோ பாரம்பரிய பகுதியான இந்த வளைவுகளைக் கொண்ட ரயில் பாதையை யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ஹிமாசலில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவினால், இப்பகுதியே அடையாளம் தெரியாத அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கிறது. விட்டு வைத்திருப்பது வெறும் தண்டவாளம் மட்டுமே. அதுவும் அந்தரத்தில் ஊசலாடுகிறது.

ஜுடோக் மற்றும் சம்மர் ஹில் ரயில் நிலையங்களுக்கு இடையேயான இந்த ரயில் பாதையில் பயணித்து சிம்லா சென்றவர்களால் நிச்சயம் இவ்விடத்தை மறக்கவே முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக மறைந்தேபோய்விட்டுள்ளது இயற்கையின் கோரத் தாண்டவத்தால்.

கீழே நதி பாய்ந்துச் செல்ல வசதியாக வளைவுகளைக் கொண்ட மேம்பாலத்தின் மீது போடப்பட்ட தண்டவாளம் மட்டுமே, இது அந்தப் பகுதியல்லவா என்பதை நினைவுபடுத்துகிறது. இப்பகுதி 2008ஆம் ஆண்டு பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

இவ்வழியாக சிறிய ரயில் ஒன்று 18 ரயில் நிலையங்களைக் கடந்து 102 சுரங்கங்களுக்குள் நுழைந்து, 988 பாலங்களில் ஏறி பயணித்துச் செல்வதே மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே..

சுற்றிலும் அடர்ந்த காடுகளுக்கு இடையே மலை மீது ஏறி அல்ல தவழ்ந்து செல்லும் அந்த ரயில் பாதைகளை மீண்டும் பழையது போல சீரமைக்க முடியுமா? 1800ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், கோடைக் காலத்தை சமாளிக்க சிம்லாவில் ஏற்படுத்தியிருந்ததுதான் இத்தனை வழித்தடங்களும். 1864ஆம் ஆண்டு இந்தியாவின் கோடைக்கால தலைநகராகவே சிம்லாவை பிரிட்டிஷ்காரர்கள் அறிவித்திருந்தார்கள் என்றால், அந்த அளவுக்கு பல வசதிகளையும் அவர்கள் செய்திருந்தனர் அப்போது.

எவ்வளவு மழை பெய்தாலும், வெள்ளம் அடித்தாலும் ரயில்வே பாலத்துக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதற்காக, 120 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்து, திட்டமிட்டு, அடுக்கடுக்காக நான்கு வளைவுகளுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் எந்த அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தாலும் எந்தத் தங்கு தடையும் இன்றி, கட்டுமானத்தை பாதிக்காத அளவில் சென்றுவிடும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முதல் இரண்டு அடுக்குகள் மண் புதைந்து, நான்கு மற்றும் மூன்றாவது வளைவுகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இருந்தன. 

தற்போது நிலைகுலைந்துபோன ஹிமாசலப் பிரதேசத்தின் மிக முக்கிய சேதமாக சிம்லா மக்கள் மட்டுமல்ல, வாழ்நாளில் ஒரே ஒரு முறை சிம்லா வந்து சென்றவர்களும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com