
மும்பை: அண்ணன்-அண்ணியை தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, 43 வயதான தம்பி தனஞ்சய் நன்வாரே தனது ஆள்காட்டி விரலை வெட்டி மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம், சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் வசித்து வருபவர் தனஞ்சய் நான்வேர். இவரது அண்ணன் நந்தகுமார் நன்வாரே(45). இவருக்கு ஊர்மிளா என்ற மனைவியும், 19, 14 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
நந்தகுமார் நன்வாரே, முன்னாள் எம்.எல்.ஏ. பப்பு கலானியிடம் தனி உதவியாளராக இருந்து வந்துள்ளார். சிவசேனை எம்.எல்.ஏ பாலாஜி கினிகரிடமும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நந்தகுமார் நன்வாரே மற்றும் அவரது மனைவி ஊர்மிளா இருவரும் கடந்த 1 ஆம் தேதி தானே மாவட்டம் உல்ஹாஸ்நகர் நகரில் உள்ள தங்களது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களது தற்கொலை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்மந்தமாக வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க | ஹிமாசலுக்கு ரூ.200 கோடி நிவாரணம்: மத்திய அரசு ஒப்புதல்!
அப்போது, தங்களது சாவுக்கு, சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்குரைஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் ஆகியோர் தான் காரணம் என்ற தற்கொலைக்கான விடியோ கிடைத்தது.
இதையடுத்து 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், தனது அண்ணன்-அண்ணி தற்கொலை வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை மற்றும் தனது சகோதரர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒருவருக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதுகுறித்த விவரம் அவரது வங்கி கணக்கு விவரம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் ஒரு "அமைச்சர்" சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். எனவே, போலீசார் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் தனஞ்சய் நன்வாரே.
இந்த நிலையில், தனது அண்ணன்-அண்ணியை தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளிகள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனமுடைந்த தனஞ்சய், அந்த மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும்படி, வெள்ளிக்கிழமை தனது இடது கையின் ஆள்காட்டி விரலை வெட்டி, மாநில உள்துறை அமைச்சரும், துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், அந்த விடியோ பதிவில் அண்ணன்-அண்ணியை தற்கொலை விவகாரத்தில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனக்கு நீதி கிடைக்கும் வரை, தனது உடல் உறுப்புகளை வாரந்தோறும் ஒவ்வொரு பாகமாக வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனஞ்சய் நன்வாரே மீட்கப்பட்டு புணேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பால்தான் நகர காவல் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.