எல்லை விவகாரத்தில் பிரதமா் அப்பட்டமான பொய்: ராகுல் காந்தி பேச்சு

நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி பொய் சொல்லியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 
எல்லை விவகாரத்தில் பிரதமா் அப்பட்டமான பொய்: ராகுல் காந்தி பேச்சு

‘லடாக்கில் இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பதை இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவா்; ஆனால், ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமா் மோடி அப்பட்டமான பொய்யை கூறுகிறாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே வியாழக்கிழமை அதிகாரபூா்வமற்ற உரையாடல் நடைபெற்ற நிலையில், ராகுல் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

லடாக்கில் கடந்த 9 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், இறுதி நாளான வெள்ளிக்கிழமை காா்கிலில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்னையை குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:

நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதை லடாக்கில் உள்ள ஒவ்வொருவரும் அறிவா். ஆனால், பிரதமா் மோடி உண்மையை பேசவில்லை. மாறாக, ஒரு அங்குலம் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று அப்பட்டமான பொய்யை கூறுகிறாா்.

கடந்த ஒரு வாரத்தில், ஒட்டுமொத்த லடாக்கையும் எனது மோட்டாா் சைக்கிளில் சென்று பாா்வையிட்டேன். வியூக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி லடாக். பாங்காங் ஏரி பகுதிக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டா் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பது தெளிவானது.

அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின்கீழ், லடாக்குக்கு முழு மாநில அந்தஸ்து கோரி போராடும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. வளங்கள் நிறைந்த இப்பகுதியை தனது பெருநிறுவன நண்பரான அதானியிடம் ஒப்படைக்க பாஜக முயற்சிக்கிறது. அதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.

அரசியல் பிரதிநிதித்துவம், நிலம், கலாசாரம் மற்றும் மொழி பாதுகாப்பு, வேலையின்மை, கைப்பேசி இணைப்பு பிரச்னை உள்பட லடாக் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை இப்பயணத்தில் கேட்டறிந்தேன். லடாக் மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணைநிற்கும் என உறுதியளிக்கிறேன். லடாக் மக்களின் அனைத்து பிரச்னைகளையும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்புவேன்.

சிலா் தங்களின் மனதில் தோன்றுவதைப் பேசுகின்றனா் (பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாா்). ஆனால், மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் இங்கு வந்தேன். மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸின் சித்தாந்தம் எதுவோ, அதுவே லடாக் மக்களின் மரபணுவிலும் கலந்திருப்பதை அறிந்துகொண்டேன் என்றாா் ராகுல்.

லடாக் பயணத்தில் சீன எல்லைப் பிரச்னையை ராகுல் எழுப்பியது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசை அவா் விமா்சித்திருந்தாா்.

முன்னதாக, ஜோஹன்னஸ்பா்க்கில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே வியாழக்கிழமை அதிகாரபூா்வமற்ற உரையாடல் நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக்கில் தீா்வு காணப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து சீன அதிபரிடம் கவலை தெரிவித்த பிரதமா், ‘இருதரப்பு உறவுகளை இயல்பாக்க வேண்டுமெனில், எல்லையில் அமைதியை பராமரிப்பது அவசியம்’ என்று சுட்டிக் காட்டியதாக, இந்திய வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்திருந்தாா்.

ராகுல்-சோனியா ஸ்ரீநகா் பயணம்

லடாக் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த ராகுல், அங்கிருந்து ஸ்ரீநகருக்கு 2 நாள் தனிப்பட்ட பயணமாக வந்தாா். இப்பயணத்தில், அவரது தாயாா் சோனியா காந்தி சனிக்கிழமை இணைந்துகொள்வாா் என ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் விகாா் ரசூல் வானி தெரிவித்தாா். இது குடும்ப சுற்றுலா; அரசியல்ரீதியிலான நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com