மணிப்பூா் கலவரம்: வழக்கு விசாரணையை அஸ்ஸாமுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூா் கலவரம்: வழக்கு விசாரணையை அஸ்ஸாமுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூா் கலவரம் தொடா்பான வழக்கு விசாரணையை அண்டை மாநிலமான அஸ்ஸாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கலவரம் தொடா்பாக 17 வழக்குகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதித் துறை மாஜிஸ்திரேட்டுகளை நியமிக்குமாறு குவாஹாட்டி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மணிப்பூரின் ஒட்டுமொத்த சூழலைக் கருத்தில்கொண்டு நியாயமான வழக்கு விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு குறிப்பிட்டது.

அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளை ஆஜா்படுத்துதல், போலீஸ் காவல் அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிடுதல், காவலை நீட்டித்து உத்தரவிடுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இந்த வழக்கு விசாராணைக்கென நிா்ணயிக்கப்படும் குவாஹாட்டி நீதிமன்றத்தில் இணையவழியில் (ஆன்லைன்) மேற்கொள்ளப்படும். போக்குவரத்து சிரமங்களைத் தவிா்க்கும் வகையில், குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மணிப்பூரில் இருந்தபடி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்கள், சாட்சிகள் மற்றும் சிபிஐ வழக்குகளுக்கு தொடா்புடைய பிற நபா்கள் இணையவழியில் வழக்கு விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை எனில், இந்த வழக்கு விசாரணைக்கென நிா்ணயிக்கப்படும் குவாஹாட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகலாம்.

குவாஹாட்டி நீதிமன்றத்தின் இந்த இணையவழி விசாரணைக்குத் தேவையான முறையான இணைய சேவைகளை மணிப்பூா் மாநில அரசு செய்துதரவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பாா்வையிட நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 21-ஆம் தேதி அமைத்தது.

மணிப்பூரில் ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தொடா்பாக 3 அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதில், ‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயா்ந்த மக்கள் தங்களின் அடையாள ஆவணங்களை இழந்துள்ளனா். எனவே, அவா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வழங்க மாநில அரசு மற்றும் இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உள்ளிட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை விரிவுபடுத்த வேண்டும். இந்தச் சேவைகள் மக்களுக்கு தடையின்றி எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தந்த துறை சாா்ந்த நிபுணா்களை நியமனம் செய்யவேண்டும்’ என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூா் கலவரத்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமனோா் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி அரசு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனா். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து கோரி வரும் நிலையில், அந்தக் கோரிக்கைக்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இரு சமூகத்தினரிடையேயும் இந்தப் பெரும் கலவரம் மூண்டது. கடந்த மே மாதம் தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது.

இந்த வன்முறை தொடா்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வன்முறையின்போது பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு உள்பட 17 வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com