நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது லேண்டர்: இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது லேண்டர்: இஸ்ரோ தகவல்
Published on
Updated on
1 min read

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது. மேலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 

அந்தவகையில் லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய விடியோவையும் வெளியிட்டது. 

நிலவின் தென் துருவத்தில் லேண்டர் நகர்ந்து செல்லும் புதிய விடியோவை சனிக்கிழமை இஸ்ரோ வெளியிட்டது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது குறித்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இறங்கிய லேண்டரில் சென்ற ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) கருவி வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியை தொடங்கியது. 

நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையைின் சுயவிவரங்களை ஆய்வு செய்கிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 10 செ.மீ ஆழம் வரை ஊடுருவி ஆராயக்கூடிய திறன் கொண்டது. 

வெப்பநிலை பரிசோதனை கருவியில் உள்ள 10 சென்சார் கருவிகள் வெப்பநிலையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவின் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைப்படத்தில் நிலவின் மேற்பரப்பு, மேற்பரப்புக்கு அருகில் பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்பநிலை மாறுபாடுகளை விளக்குகிறது. விரிவான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் இது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய லேண்டர் ஆய்வு செய்து அனுப்பிய முதல் தகவல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

வெப்பநிலை ஆய்வு கருவியை பெங்களூரு, அகமதாபாத் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு உருவாக்கி உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com