பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டிருப்பதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
லேண்டரில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
தற்போது இஸ்ரோ தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், ஆக.27-ஆம் தேதி 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை 3 மீட்டருக்கு முன்னதாகவே ரோவர் கணித்து, அதன் பாதையை மாற்றி பயணித்ததாக தெரிவித்துள்ளது. மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: இஸ்ரோ
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவா் நிலவின் மீது தரையிறங்கும் காணொலியை இஸ்ரோ வெளியிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை, ரோவர் நகர்ந்து செல்லும் விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.