புது தில்லி: காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீரை அடுத்த 15 நாள்களுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் திங்கள்கிழமை (ஆக.28) எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொண்ட ஆணையம், இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதே சமயம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தமிழகம் அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்த அளவு நீர் போதாது எனவும் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23}ஆவது கூட்டம் அதன் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவரும் மத்திய நீர்வள ஆணையத்தின் உறுப்பினருமான வினித் குப்தா, ஆணையச் செயலர் டி.டி சர்மா, ஆணைய உறுப்பினர்
(வேளாண் துறை) கோபால் லால், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், கர்நாடக நீர்வளத் துறைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூறியபடி பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முதலில் வலியுறுத்தப்பட்டது.
இதன்படி தண்ணீரை 10 நாள்களுக்கு கொடுத்தால் கர்நாடகம் நிலுவை வைத்துள்ள 49 டிஎம்சி தண்ணீரில் 25 டிஎம்சி தண்ணீரையாவது பெற முடியும் என தமிழகம் கூறியது.
பின்னர், பற்றாக்குறை காலம், கர்நாடக அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு ஒரு செயல் திட்டத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழு திங்கள்கிழமை உருவாக்கியது.
கர்நாடகத்தின் 4 அணைகளில் கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9}ஆம் தேதி 42.54 சதவீதம், ஆகஸ்ட் 27}ஆம் தேதி 51.22 சதவீதம் நீர்வரத்து பற்றாக்குறை என குழு கணக்கிட்டது. இந்த செயல்திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனினும், இதன் அடிப்படையில் வழங்கப்படவேண்டிய தண்ணீரின் அளவின்படியாவது விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் தமிழக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இதற்கு கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. தென்மேற்கு பருவமழையை மட்டுமே நம்பியுள்ள கர்நாடகத்தில் 60 சதவீத பருவம் கடந்துவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை மூலம் அதன் அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.
மழை பற்றாக்குறையால் கர்நாடகம் வறண்டு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக உள்ளது. நீர்ப்பாசனங்கள் குறைந்துள்ளன. எனினும், பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களின் குடிநீர்த் தேவை, பல்வேறு வகையான தண்ணீர் இழப்புகள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்க முடியும் என கர்நாடகம் குறிப்பிட்டது.
இரு மாநில வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், இறுதியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் பரிந்துரைகளைக் கவனத்தில்கொண்டு, அடுத்த 15 நாள்களுக்கு (29.08.2023 முதல் 12.09.2023 வரை) பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வருவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன்படி இந்த 15 நாள்களில் கர்நாடகம் தண்ணீரை குறைவில்லாமல் வழங்கினால் நாளொன்றுக்கு 0.4 டிஎம்சி வீதம் மொத்தம் தமிழகத்துக்கு சுமார் 6 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


