சிறிய நீர்ப்பாசனத்தில் 94.8% பங்கு நிலத்தடி நீர்! தமிழகத்தில் 97.9%
நாட்டில் சிறிய நீர்ப்பாசனத்தில் 94.8 சதவீதம் நிலத்தடி நீர் மூலமே நடைபெறுவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நாட்டில் சிறிய நீர்ப்பாசனத்தில் 94.8 சதவீதம் நிலத்தடி நீர் மூலமே நடைபெறுவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 97.9 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் சிறிய நீர்ப்பாசனம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய நீர்ப்பாசன (எம்.ஐ.) திட்டங்கள் குறித்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் 6 -ஆவது கணக்கெடுப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
நாடு முழுவதும் 2.31 கோடி சிறிய நீர்ப்பாசனம் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 94.8 சதவீதம் (2.19 கோடி) நிலத்தடி நீர் மூலமே நடைபெறுகிறது. மேலும், மொத்தமுள்ள சிறிய நீர்ப்பாசனங்களில் நாட்டில் 5.2 சதவீதம் (12 லட்சம்) மட்டுமே நீர்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் போன்ற மேற்பரப்பு நீர் வழியாக நடைபெறுகிறது.
நாட்டிலேயே உத்தர பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை (39.76 லட்சம்) கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளன.
பெரிய மாநிலங்களான பிகார், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் சிறிய வகை நீர்ப்பாசனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நிலத்தடி நீர்ப்பாசனமே முன்னணியில் உள்ளது. தோண்டப்பட்ட கிணறுகள், குழாய்க் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், ஆழமான ஆழ்குழாய் கிணறுகள், ஆழமற்ற ஆழ்குழாய் கிணறுகள், நடுத்தர குழாய் கிணறுகள் போன்றவை இதில் அடங்கும்.
ஏரி, குளம், மேற்பரப்பு நீரோட்டம் வழியான நீர்ப்பாசனத் திட்டங்களில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 97 சதவீதம் பயன்பாட்டில் உள்ளன. 2.1 சதவீதம் மட்டுமே தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லை. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களில் (96.6 சதவீதம்) தனிநபர்களே உரிமையாளர்களாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் (98.3 சதவீதம்) நிலத்தடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்துகின்றனர். முதல்முறையாக, இந்த சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தின் உரிமையாளரின் பாலினம் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன. தனிநபர் திட்டங்களில் 18.1 சதவீதம் பெண்களுக்குச் சொந்தமானவை. இத்தகைய நீர்ப்பாசனத் திட்டச் செலவினங்களுக்கு பெரும்பாலும் (79.5 சதவீதம்) தனிப்பட்ட விவசாயிகள் சொந்த சேமிப்பு நிதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில்... தமிழகத்தில் மொத்தம் 21,14, 909 சிறிய நீர்ப்பாசனங்கள் உள்ளன. இதில் 20,70,818 ((97.9 சதவீதம்) நீர்ப்பாசனம் நிலத்தடி நீரை நம்பியே நடைபெறுகிறது. மீதமுள்ள 44,091 நீர்ப்பாசனம் ஏரி, குளம் மற்றும் மேற்பரப்பு நீரோட்டம் வழியாக நடைபெறுகிறது.
நிலத்தடி நீர்ப்பாசனத்தில் 74.5 சதவீதம் தோண்டப்பட்ட கிணறுகளில் நீர் எடுக்கப்படுகிறது.
நீர் இறைப்பதில் மாடுகள் போன்ற விலங்குகளைக் கொண்டு பயன்படுத்துவது குறைந்து, தமிழகத்தில் 94.3 சதவீத நீர்ப்பாசனங்களில் மின் சாதனங்கள் மூலமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறிய நீர்ப்பாசனத்தைப் பொருத்தவரை தமிழகத்தில் கடந்த கணக்கெடுப்பைவிட 42,392 (2 சதவீதம்) அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசு புள்ளிவிவரப்படி இது 45, 252-ஆக உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறிய நீர்ப்பாசனங்களைப் பயன்படுத்துபவர்களில் 67.6 சதவீதம் தனிநபர்களே உரிமையாளர்களாக உள்ளனர். 29.1 சதவீதம் கூட்டாகவும், மீதமுள்ள 3.26 சதவீதம் பொதுவானவையாகவும் உள்ளன. இதில் 78.63 சதவீத உரிமையாளர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவும், 7.84 சதவீதம் பட்டியலினத்தவர், 1.2 சதவீதம் பழங்குடியினருக்கு உரிமையானது போன்ற சமூக ரீதியான தரவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், நிலத்தடி நீர் சுரண்டல், நிலத்தடி நீர் மேம்பாடு, மேலாண்மை, நீர்ப்பாசன உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை நீர்வளம், வேளாண் துறை நீர்ப்பாசனத் திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி நீர் விஞ்ஞானிகள், நிர்வாகிகள், விவசாய பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்புடையவர்கள் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...