காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர்! - டி.கே. சிவகுமார் பரபரப்பு தகவல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேசியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். 
சந்திரசேகர் ராவ் | டி.கே. சிவகுமார்
சந்திரசேகர் ராவ் | டி.கே. சிவகுமார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் வேட்பாளர்களை அணுகியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பாரத ராஷ்டிர சமிதி கட்சியினர் எங்களை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். முதல்வர் சந்திரசேகர் ராவ் அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், எங்கள் கட்சி வேட்பாளர்கள் வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டார்கள். 

கர்நாடகத் தேர்தலின்போது தெலங்கானா காங்கிரஸ் குழு முழுவதும் எங்களுடன் இருந்தது. அதுபோலவே நாங்களும் அங்கு செல்கிறோம். நாளை முடிவுகள் வெளியாகின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதன்படி நான் தெலங்கானா செல்கிறேன். அண்டை மாநில தேர்தல் பணியில் எங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன' என்று தெரிவித்தார். 

முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர் ரேணுகா சவுத்ரி, பிஆர்எஸ் கட்சியினரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் கட்சியில் சேரும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறை 12 எம்எல்ஏக்களை அவர்கள் தங்கள் பக்கம் இழுத்ததாகவும் இந்த முறையும் தங்களுக்கு அழைப்பு வருவதாகவும் கூறியுள்ளார்.

தெலங்கானாவில் கடந்த நவ. 30 ஆம் தேதி 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 71.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், தெலங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் வேட்பாளர்களை அணுகியதாக டி.கே.சிவகுமார் கூறியுள்ளது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com