ராஜஸ்தானில் முழு அடைப்பு நடத்த ராஜ்புத் அமைப்புகள் அழைப்பு!

சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராஜ்புத் சமூக அமைப்புகள் மாநில அளவிலான முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ராஜஸ்தானில் முழு அடைப்பு நடத்த ராஜ்புத் அமைப்புகள் அழைப்பு!

சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராஜ்புத் சமூக அமைப்புகள் மாநில அளவிலான முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ராஜஸ்தானில் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு ராஜ்புத் சமூக அமைப்புகள் புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளன.  

ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடியை மர்ம நபர்கள் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல் ஆணையாளர் பிஜு ஜார்ஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மூன்று பேர் கோகமேடியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திக்க வேண்டுமென்று கோகமேடியின் பாதுகாவலர்களிடம் கூறியுள்ளனர்.

பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபின், அவர்கள் கோகமேடியிடம் சுமார் 10 நிமிடம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கோகமேடி உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான நவீன் சிங் ஷெகாவத்தும், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளார். மற்ற இரண்டு மர்ம நபர்களும் கோகமேடியின் வீட்டிற்கு வெளியே ஒரு நபரிடம் இருந்து பறித்த இருசக்கரவாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். தப்பியோடியவர்களை விரைவில் பிடிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கர்னி சேனா அமைப்பின் நிறுவனரான லோகேந்திர சிங் கால்வியின் மகன் பவானி சிங் கால்வி சுக்தேவ் சிங் கோகமேடியை கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் ஷேஷாத் பூனாவாலா, “பாஜக அரசு இன்னும் பதவியேற்கவில்லை. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்தான் காபந்து அரசாக செயல்பட்டு வருகிறது. சுக்தேவ் சிங் கோகமேடியின் பாதுகாப்பை அசோக் கெலாட் குறைத்தது தவறு.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com