மக்களவையில் என்ன நடந்தது? - கனிமொழி எம்.பி. பேட்டி

பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 
கனிமொழி
கனிமொழி

பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

தில்லியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

சம்பவம் நடந்தபோது நான் மக்களவையில்தான் இருந்தேன். ஒருவர் மேசை மீது ஏறி வந்தார். இன்னொருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து குதித்து வந்தார். அவர்கள் கையில் இருந்த ஷூவில் இருந்து எடுத்த மெட்டல் சிலிண்டரில் இருந்து மஞ்சள் நிற புகை வரச் செய்தார்கள். அதில் ஒரு வாசனையும் வந்தது. ஒரு நிமிடத்தில் மக்களவை முழுவதும் புகை பரவியது. மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது.

புதிய நாடாளுமன்றத்திற்கு வந்து இன்று இதுபோன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பார்வையாளர் பகுதியில் இருந்து யார் வேண்டுமானாலும் எளிதில் உள்ளே நுழைந்துவிடும் அளவுக்குத்தான் கட்டட அமைப்பு இருக்கிறது. பாதுகாப்பின்மைதான் காரணம்.

இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம், எனவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு அவ்வளவு மோசமாக உள்ளதைத்தான் காட்டுகிறது. எம்.பி.க்களே போட்டோ, அடையாள அட்டை காட்டி, இரண்டு நுழைவாயில்களைத் தாண்டிதான் உள்ளே செல்ல வேண்டும். 

பிரதமர் இருக்கக்கூடிய அவையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து நாங்கள் கேள்வி கேட்டால்கூட தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், எதிரானவர்கள் என்று கூறுகின்றனர். இன்றைய சம்பவம்தான் தேசப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருக்கிறது.

மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் அந்த நேரத்தில் அதிகமான பேர் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடந்திருந்தால் விளைவுகள் அதிகமானதாக இருந்திருக்கலாம்' என்று பேசினார். 

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல்: 

இன்று(புதன்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். 

பின்னர் மக்களவைக்குள் நுழைந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவைக்கு வெளியே கோஷமிட்ட இருவர் என ஒரு பெண் உள்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து, தில்லி காவல்துறையினர், சிஆர்பிஎப் என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com