ஞானவாபி மசூதி விவகாரம்: ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது தொல்லியல் துறை!

ஞானவாபி மசூதி குறித்த ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது.
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை இன்று (டிச.18) வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்தது.  

இந்த ஆய்வறிக்கையானது சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக சில ஹிந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதையடுத்து மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு ஜூலை 21-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை தனது ஆய்வை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆய்வறிக்கையை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. 

அதன்பின் மீண்டும் பதினைந்து நாட்கள் அவகாசம் கோரியது தொல்லியல் துறை. பத்து நாட்கள் அவகாசம் அளித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவ.30-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கி, விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, இன்று (டிச.18) தொல்லியல் துறை ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com