சில்க்யாரா சுரங்கத்தில் உயிரை பணயம் வைத்த தொழிலாளர்களுக்குக் கிடைத்ததோ?

சுரங்கத் தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பணமாக்கப்போவதில்லை என்கிறார்கள்.
சில்க்யாரா சுரங்கத்தில் உயிரை பணயம் வைத்த தொழிலாளர்களுக்குக் கிடைத்ததோ?


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க உதவிய தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பணமாக்கப்போவதில்லை என்கிறார்கள்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 12 சுரங்கத் தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், முதல்வர் தங்களுக்கு அளித்திருப்பது, உயிரை பணயம் வைத்து நாங்கள் செய்த வேலைக்கு பொருத்தமாக இல்லை என்று தொழிலாளர்கள் குமுறுகிறார்கள்.

அது மிகவும் நம்பிக்கையிழந்திருந்த தருணம். சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரங்கள் செயலிழந்தபோது நாங்கள்தான் பாதையைத் தோண்டினோம். எந்த தற்காப்பு வசதிகளும் இல்லாமல், சுரங்கத்தை நாங்களே தோண்டு எடுத்தோம். எங்களுக்கு பாராட்டுகள் எல்லாம் நன்றாகத்தான் வந்தன. ஆனால், முதல்வர் கொடுத்திருக்கும் வெகுமானம் போதுமானதாக இல்லை என்கிறார் அக்குழுவின் தலைவர் விகில் ஹஸ்ஸன்.

இந்த சம்பவத்தில் எங்களை கதாநாயகர்கள் போல கொண்டாடினார்கள். ஆனால், அரசு தரப்பிலிருந்து கிடைத்திருப்பது நிச்சயம் அதற்கு பொருத்தமானது அல்ல. அரசு கொடுத்திருக்கும் காசோலையை பணமாக்கப்போவதில்லை. காசோலையை கொடுத்த போதே, முதல்வரிடம் எங்களது அதிருப்தியை தெரிவித்துவிட்டோம். 12 தொழிலாளர்களுக்கும் அரசு வேலை என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், காசோலையை திருப்பியளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பணியின்போது, நாங்கள் மரணத்தின் பிடிக்குள் சென்று வந்தோம். எங்கள் குடும்பத்தினர் சொன்னதைக் கூட கேட்காமல், 41 பேரை காப்பற்ற வேண்டும் என்று போராடினோம். இதற்கு 50 ஆயிரம் போதுமா? நிரந்தர வேலை அல்லது இருக்க வீடு ஏதேனும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்கள் 12 பேரின் பணியும், சம்பவத்தின்போது வெகுவாகப் பாராட்டப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், சுரங்கப் பாதைக்குள் இருந்த 41 தொழிலாளா்கள் கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். ராணுவம், தேசியப் பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட பல ஏஜென்சிகளின் நடவடிக்கையைத் தொடா்ந்து 17 நாள்களுக்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மீட்புப் பணிக்கு முக்கியமாக ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ஆஜா் இயந்திரம் தடைகளை எதிா்கொண்டதை அடுத்து, ‘எலி வளை’ சுரங்க நிபுணா்களின் 12 போ் கொண்ட குழு துளையிட அழைக்கப்பட்டு, அந்த செயல்திட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. இக்குழுவில் இடம்பெற்ற 6 போ் வடகிழக்கு தில்லியைச் சோ்ந்தவா்கள். இவா்கள், தில்லி ஜல் போா்டுக்கான கழிவுநீா் பாதைகள் மற்றும் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவா்கள். 

41 உயிா்களைக் காப்பாற்றுவதில் இந்த ’எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களின் விரைவான பணிக்காக நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com