இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

மறு அறிவிப்பு வரும்வரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மறு அறிவிப்பு வரும்வரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் மல்யுத்த வீரர்களுக்கான முறையான அறிவிப்புகளைக் கூட வழங்காமல் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை ஏற்பாடு செய்வதாக வெளியிட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரி, “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவர்களை நாங்கள் நீக்கவில்லை. மறு அறிவிப்பு வரும்வரை இடைநீக்கம் மட்டுமே செய்துள்ளோம். அவர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தல் டிச.21-ம் தேதி நடைபெற்றது. அதில் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் மற்றும் சிலர் வெற்றி பெற்றனர்.

சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் அவர் தேர்வு செய்யப்பட்ட டிச.21-ஆம் தேதியே “இந்த ஆண்டு இறுதிக்குள் யு-15 மற்றும் யு-20 பிரிவினருக்கான போட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் நந்தினி நகரில் நடைபெறும்” என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ‘தேசியப் போட்டிகளில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்களுக்கு போதுமான அவகாசமோ, அறிவிப்போ கொடுக்காமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு மிகவும் அவசரகதியானது மற்றும் விதிமுறைகளுக்கு முரணானது’ என்று விளையாட்டு அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஏராளமான மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்கள் பேசவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com