கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளே வறட்சியை விரும்புகின்றனர்: கர்நாடக அமைச்சர் பேச்சு!

கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளே வறட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாக கர்நாடக அமைச்சர் சிவானந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளே வறட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாக கர்நாடக அமைச்சர் சிவானந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தங்களின் கடன்கள் தள்ளுபடி ஆகவேண்டும் என்பதற்காகவே வறட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாக கர்நாடக வேளாண் விற்பனைத் துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவானந்த் பாட்டீல், "கிருஷ்ணா நதி நீர் இலவசம், மின்சாரம் இலவசம், விதை மற்றும் உரங்களையும் முதல்வரால் வழங்கப்பட்டன. வறட்சியின் காரணமாக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் வறட்சி ஏற்பட வேண்டும் என்று மட்டுமே விவசாயிகள் விரும்புவார்கள்.

நீங்கள் அவ்வாறு ஆசைப்படக்கூடாது. நீங்கள் அப்படி ஆசைப்படாவிட்டாலும் கூட மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சி ஏற்படத்தான் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

சிவானந்த பாட்டீலின் இந்தப் பேச்சு மிகவும் பொறுப்பற்றது என்று கூறிய மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா,  “சிவானந்த் பாட்டீல் மீண்டும் விவசாயிகளை அவமதித்துள்ளார். நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை பொறுப்பற்றது. பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறினார்.

பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், “சிவானந்த் பாட்டீலின் பேச்சு அதிகார போதையின் உச்சத்தைக் காட்டுகிறது. விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. இதுபோன்ற பேச்சுகளை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வர் அவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய பேச்சுகள் மூலம் விவசாயிகள் அவமதிக்கப்படுகின்றனர். சிவானந்த் பாட்டீல் ஒரு நிமிடம் கூட அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ‘இறந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்ட பிறகு, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின’ என்று செப்டம்பர் மாதம் சிவானந்த பாட்டீல் கூறியது ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com