பாஜகவின் செயல்பாடுகள் ராமரின் போதனைகளுக்கு நேர் எதிரானவை: கபில் சிபல்

பாஜகவினரின் செயல்பாடுகள் ராமரின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்தார். 
கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)

பாஜகவினரின் செயல்பாடுகள் ராமரின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

காங்கிரஸை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை பேசியதாவது, “பாஜகவினர் ராமரைப் பற்றி பேசி வருகின்றனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ராமரின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை. அவர்களின் நடத்தைகள் ராமரின் அருகில் கூட வரமுடியாது.

சகிப்புத்தன்மை, உண்மை, தியாகம், மரியாதை ஆகியவை ராமரின் குணநலன்களாகும். இவற்றுக்கு நேர் எதிரான குணநலன்களைக் கொண்டவர்கள் பாஜகவினர். அவர்கள் ராமருக்கு கோயில் கட்டுவதாகவும், ராமரை பெருமைப்படுத்துவதாகவும் கூறிக் கொள்கின்றனர். 

நமது இதயங்களில் ராமர் இருக்கவேண்டும். எனது இதயத்தில் ராமர் இருக்கிறார். அதனை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரின் போதனைகளை நாம் பின்பற்றி நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.” என்று கூறினார். 

மேலும் புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதக்கள் குறித்துப் பேசிய கபில் சிபல், “முதலில் இந்த மசோதாக்களை இந்த விதத்தில் நிறைவேற்றியிருக்கக் கூடாது. மக்களவையில் 100 எம்.பி.க்களையும், மாநிலங்களவையில் 46 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்துள்ளார்கள்.

இந்த மசோதாக்கள் குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்குமாறு கூறினோம். ஆனால் அவர்கள் எந்தவித ஆலோசனையும் பெறாமல், விவாதமும் நடத்தாமல் இந்த மசோதாக்களை நிறைவேற்றி உள்ளனர். 

இந்த மசோதாக்கள் 90 சதவீதம் தற்போது இருக்கும் சட்டங்களின் மொழிபெயர்ப்புதான். மேலும் இவை காலனித்துவ ஆட்சிக்கால சட்டங்களை விட கடுமையானவையாக உள்ளன. இவற்றில் துளியும் இந்தியத் தன்மை இல்லை.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com