தில்லி பாதிக்கப்பட்டோா் இழப்பீட்டுத் திட்டம் 2018-இல் திருத்தம் மேற்கொள்ள துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது கும்பல் வன்முறை மற்றும் கொலைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கருணைத் தொகையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் தயாரிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 2018-இல் உத்தரவிட்டது. ஆனால், தில்லி அரசு ஒரு முன்மொழிவை சமா்ப்பிக்க ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தின் மாற்றங்களின்படி, ‘பாதிக்கப்பட்டவா்’ என்பதன் வரையறை, கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகளால் இழப்பு அல்லது காயம் அல்லது மரணம் அடைந்த ஒரு நபரின் பாதுகாவலா் அல்லது சட்டப்பூா்வ வாரிசை உள்ளடக்கும் வகையில் இருக்கும். சம்பவம் நடந்த 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்டவா்களுக்கு அல்லது இறந்தவரின் உறவினா்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.
உச்சநீதிமன்றம் ஜூலை 17, 2018 அன்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 357ஏ- இன் விதிகளின் கீழ், தீா்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள் மாநில அரசுகள் கொலை / கும்பல் வன்முறை இழப்பீட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடுவதற்கான திட்டத்தில், உடல் காயம், உளவியல் காயம் மற்றும் வருவாய் இழப்பு ஆகியவற்றின் தன்மை குறித்து மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.
வருவாய் இழப்பின் அடிப்படையில், இது வேலை வாய்ப்பு இழப்பு மற்றும் கல்வி மற்றும் வழக்கை எதிா்கொள்வதற்கு செலவழிக்கப்பட்ட நிதி, மருத்துவச் செலவு மற்றும் கும்பல் கொலைகள் / கும்பல் வன்முறை காரணமாக ஏற்படும் செலவுகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். தில்லி பாதிக்கப்பட்டோா் இழப்பீட்டுத் திட்டம், 2018, ஜூன் 27, 2019 தேதியிட்டு அப்போதைய துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொலை மற்றும் கும்பல் வன்முறைக்கான இழப்பீடு பிரச்னை அதில் உள்ளடக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.