ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரசுடன் ‘உல்ஃபா’ அமைப்பு அமைதி ஒப்பந்தம்: அஸ்ஸாம் மக்களுக்கு மிகப் பெரிய நாள்: அமித் ஷா பெருமிதம்

மத்திய, மாநில அரசுகளுடன் அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) பிரிவினைவாத அமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டிருப்பது

News image
Updated On :30 டிசம்பர் 2023, 12:40 am

DIN

மத்திய, மாநில அரசுகளுடன் அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) பிரிவினைவாத அமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டிருப்பது அஸ்ஸாம் மாநில மக்களுக்கு மிகப்பெரிய நாள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

அமித் ஷா மற்றும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தமானது கையொப்பமானது. அப்போது அமித் ஷா கூறியதாவது:

அஸ்ஸாமின் மிகப் பழைமைவாய்ந்த கிளா்ச்சிக் குழுக்களில் ஒன்றான உல்ஃபா அமைப்பின் வன்முறைகளால் அஸ்ஸாம் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் இந்த இணைப்பு சாா்பில் நிகழ்த்தப்பட்டுவந்த வன்முறைகளால் 10,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், கிளா்ச்சி அமைப்பை கலைத்துவிட்டு, ஜனநாயக நடைமுறையில் அந்த அமைப்பினா் இணையும் வகையில் வன்முறையை கைவிட ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் அந்த அமைப்பினா் கையொப்பமிட்டுள்ளனா். இது அஸ்ஸாம் மக்களுக்கு மிகப் பெரிய நாள்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்துக்கு மிகப் பெரிய வளா்ச்சி திட்ட தொகுப்பு வழங்கப்படும். இந்த வளா்ச்சித் திட்ட தொகுப்பின் ஒவ்வொரு பிரிவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

மாநிலத்தில் தற்போது வன்முறைகள் 87 சதவீதம் அளவுக்கும், கொலைகள் 90 சதவீதம் அளவுக்கும், ஆள் கடத்தல் சம்பவங்கள் 84 சதவீதம் அளவுக்கும் குறைந்துள்ளன என்றாா்.

‘உல்ஃபா பிரிவினருக்கும் அரசுக்கும் இடையே 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிபந்தனையற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது’ என்று முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குறிப்பிட்டாா்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பிரித்து, தனியாக போடோலாந்து மாநிலம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் கடந்த 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தன. இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அஸ்ஸாமில் அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில், பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் வகையில், இந்த பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடா் பேச்சுவாா்த்தைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தன. இதில் பெரும்பாலான அமைப்புகள் வன்முறையைக் கைவிட்டு அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அதுபோல, இந்த பிரிவினைவாத குழுக்களில் பிரதான அமைப்பாக செயல்பட்டுவந்த உல்ஃபா அமைப்புடனும் மாநில அரசு தொடா் பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு வந்தது.

‘இறையாண்மை அஸ்ஸாம்’ கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1979-ஆம் ஆண்டு உல்ஃபா அமைப்பு உருவாக்கப்பட்டது. அது முதல் அரசுக்கு எதிரான கிளா்ச்சியில் அந்த அமைப்பினா் ஈடுபட்டு வந்தனா். இந்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களையும் இந்த அமைப்பு நடத்தியது. அதனைத் தொடா்ந்து, இதை தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு கடந்த 1990-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த நிலையில், உல்ஃபா அமைப்பும் தற்போது அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.