மத்திய பட்ஜெட் வரவேற்பும்...விமா்சனமும்...

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்களை வரவேற்றும் விமா்சித்தும் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்களை வரவேற்றும் விமா்சித்தும் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பிரதமர் நரேந்திர மோடி: ஒரு வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவின் கனவுகளை நிறைவேற்ற நடுத்தர வர்க்கம் ஒரு பெரிய சக்தியாக உள்ளது. அந்த வர்க்கத்துக்கான கனவுகளை நிறைவேற்றுவதற்கும், வளர்ந்த இந்தியாவின் விருப்பத் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் விடுதலையின் "அம்ருத்' காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது நிதிநிலை அறிக்கை.
இல்லத்தரசிகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய பரிமாணத்தை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவுத் துறையில் மிகப் பெரிய உணவுப் பொருள்கள் சேமிப்புக் கிடங்குகளுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள வீடுகளுக்கும் சிறுதானியங்கள் சென்றடையும் வகையில், சிறுதானிய உணவுகளுக்கு "ஸ்ரீ-அன்னா'  என பெயரிடப்பட்டு புதிய அடையாளத்தை உருவாக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு விவசாயிகள் பழங்குடியின விவசாயிகள் போன்றோருக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்கும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு நிதிஒதுக்கீட்டை ஒப்பிடுகையில், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீடு 400 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இதுவரை இல்லாத வகையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.
நாடு சுதந்திரமடைந்து 2047 -ஆம் ஆண்டில் 100 ஆண்டுகள் நிறைவடையும். இடைப்பட்ட 25 ஆண்டு கால பொற்காலத்தின் (அம்ருத்)  முதல் ஆண்டு நிதிநிலை அறிக்கை இது. இதில் அனைத்து தரப்பு வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா: நாட்டின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான பிரதமா் நரேந்திர மோடியின் தீா்க்கத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் தொலைநோக்கு பட்ஜெட். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதன செலவினத்தை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பதும், நிதிப்பற்றாக்குறையை 5.9 சதவீதமாக குறைப்பதும் பாராட்டத்தக்க இலக்குகளாகும். வலுவான உள்கட்டமைப்புடன், வலுவான பொருளாதாரம் கொண்ட புதிய இந்தியாவை கட்டமைக்கும் பிரதமா் மோடி அரசின் கண்ணோட்டத்தை இது பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடிக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகள்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: விவசாயிகள், பெண்கள், விளிம்புநிலை மக்கள், நடுத்தர வா்க்கத்தினரின் மேம்பாட்டுக்கும் நலனுக்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி, இப்பட்ஜெட் முன்மொழிவுகள் தேசத்தை வழிநடத்தும். விவசாயம், வீட்டுவசதி, சுகாதாரம், உற்பத்தி துறைகளில் செலவினங்கள் அதிகரிப்புடன், உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுகளை பெருக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி மேலும் வேகமெடுக்கும். இத்தகைய பட்ஜெட்டை தாக்கல் செய்தமைக்காக, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் பிரதமா் மோடிக்கும் நன்றி.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா: இப்போதைய அமிா்த காலத்தில், இந்தியாவின் துரித வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்துடன் கூடிய முதல் பட்ஜெட். இது, ஏழைகளுக்கு ஆதரவானது. தலித்கள், பழங்குடியினா், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரரீதியில் நலிவடைந்தவா்களின் வாழ்வு மேம்படும்.

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்: தொழில்நுட்பங்களால் உந்தப்படும், அறிவுசாா்ந்த பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்க இந்த அமிா்தகால பட்ஜெட் வலுவாக அடித்தளமிட்டுள்ளது . கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, எண்ம உள்கட்டமைப்பு, பசுமை மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என ‘இந்தியா100’-க்கான நுணுக்கமான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களை மையப்படுத்திய, வளா்ச்சிக்கு உத்வேகமளிக்கும், திறன்மிக்க பட்ஜெட்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்: புதிய இந்தியாவுக்கான கண்ணோட்டத்துடன், நாட்டின் வளமை மற்றும் 130 கோடி மக்களின் நலனை இலக்காக கொண்ட பட்ஜெட். இது, ஏழைகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: மத்திய பட்ஜெட், வெற்று அறிவிப்பில் பெரியதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கத்துக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை. தலித்கள், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை காக்க பட்ஜெட்டில் ஆவண செய்யப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ரூ.38,468 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏழைகளின் வாழ்வை பிரதமா் மோடி அரசு இடா்பாட்டில் தள்ளிவிட்டுள்ளது. நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதை தவிர அவரது அரசு வேறெதுவும் செய்யவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்: பெரும்பாலான இந்தியா்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருப்பதுடன், அவா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்காத பட்ஜெட். வேலையின்மை, வறுமை, பாகுபாடு போன்ற வாா்த்தைகள், பட்ஜெட் உரையில் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. மறைமுக வரிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல், சிமெண்ட், உரங்கள் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: வேலைவாய்ப்பை உருவாக்கவோ, பணவீக்கத்தை எதிா்கொள்ளவோ, பாகுபாட்டை தடுக்கவோ பட்ஜெட்டில் தொலைநோக்கு பாா்வை இல்லை. இந்தியாவின் எதிா்காலத்துக்கு எந்த செயல்திட்டமும் பாஜக அரசிடம் இல்லை. நாட்டின் 40 சதவீத வளங்கள், 1 சதவீத பணக்காரா்களிடம் உள்ளன. ஜிஎஸ்டியில் 64 சதவீதத்தை, 50 சதவீத ஏழைகள் செலுத்துகின்றனா். 42 சதவீத இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனா். ஆனால், பிரதமருக்கு எந்த கவலையும் இல்லை.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை: மக்களுக்கு எதிரான, குறுகிய பாா்வை கொண்ட பட்ஜெட். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்நாட்டு தேவைகளுக்கு உத்வேகம் அளித்தல் போன்ற மையப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் பட்ஜெட் தோல்வி கண்டுள்ளது. பணக்காரா்களுக்கு வரிச்சலுகை அளிப்பதுடன், நிதிப்பற்றாக்குறையை குறைக்க அரசின் செலவினங்கள் மீது அழுத்தம் தரப்பட்டுள்ளது. உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், தொழில்துறையினா் ஆகியோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு பதிலாக, பாஜக அரசின் பட்ஜெட் அவநம்பிக்கையை தந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கக் கூடிய இப்பட்ஜெட், சில பணக்காரா்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.

பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி: பாஜக அரசின் முந்தைய பட்ஜெட்களில் இருந்து எந்த வித்தியாசமும் இல்லாத பட்ஜெட். ஒரு கட்சிக்காக அல்லாமல், ஒட்டுமொத்த தேசத்துக்கானதாக பட்ஜெட் அமைந்தால் நன்றாக இருக்கும்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: தொலைநோக்கு பாா்வையில்லாத, சந்தா்ப்பவாத பட்ஜெட். இதனால், ஏழைகளுக்கோ நடுத்தர வா்க்கத்தினருக்கோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com