பெண் குழந்தைகளைக் கொண்டாடும் கிராமம் இது!

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரக் கன்றுகளை நடுகிறார்கள்.
பெண் குழந்தைகளைக் கொண்டாடும் கிராமம் இது!

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இவற்றில் சில பகுதிகளில் சில சுவாரசிய மரபுவழி சடங்குகள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் உலக அளவில் கவனம் பெறுவதுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. 

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் எந்தவொரு வீடாக இருந்தாலும் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரக்கன்றுகள் நடும் பழக்கம் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள விப்லாந்த்ரி கிராமத்தில்தான் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரக் கன்றுகள் நடுவதன் மூலமாக, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்ட இந்த கிராமம் தற்போது செழித்துத் திகழ்வதுடன் பிற கிராமங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் விளங்குகிறது.

இந்த கிராமத்தில் வசிப்பவரும் கிராமத்தின் முன்னாள் தலைவருமான ஷியாம் சுந்தர் பாலிவால், சுற்றுச்சூழலையும் அனைத்து உயிரினங்களையும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களையும் காப்பாற்றுவதற்காகவே மனிதர்களைப் புத்திசாலித்தனமாகக் கடவுள் படைத்துள்ளார் என நம்புவதாகக் கூறுகிறார். 

கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் இந்த கிராமத்தில் சுரங்கம் மற்றும் காடழிப்பு காரணமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது நீரிழப்பு (டீஹைட்ரேஷன்) காரணமாக சுந்தர் பாலிவாலின் மகள் கிரண் என்பவர் மரணமடைந்தார். இதனால் மனமுடைந்த பாலிவால், கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் அந்த குழந்தை பெயரில் 111 மரக் கன்றுகள் நட வேண்டும் என்று கூறினார். 

அதன்படி இந்த 17 ஆண்டுகளில் வேம்பு, மா, நெல்லிக்காய், ஆலமரம், அரச மரம், மூங்கில் என இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் கல்வி மற்றும் நலனுக்காகக் கிராம மக்களிடமிருந்து ரூ. 21 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அந்த பெண் குழந்தையை ஒரு பாரமாக நினைக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் அங்குள்ள பெண்களும் சுதந்திரமாக இருப்பது கூடுதல் ஆச்சரியம். 

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பாலிவால், பெண் குழந்தைகள், நீர், மரங்கள், மூதாதையர் நிலம் ஆகியவற்றை மேம்படுத்துவதே பிராயசித்தமாக இருக்கும் என்று நம்புகிறார்.

இன்னும் பல கிராமங்களில் ஏன் சில  நகரங்களில்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் கொண்டாடுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com