சுகாதாரத் துறையில் முதலீட்டாளர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்: மன்சுக் மாண்டவியா

சுகாதாரத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதனைப் பயன்படுத்தி சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சுகாதாரத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதனைப் பயன்படுத்தி சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்த மாநாடு உத்தப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சியில் உள்ளபோது நடக்கிறது. இந்த மாநாட்டில் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். உத்தரப் பிரதேசம் சிறப்பாக செயல்படும் சுகாதாரத் துறை அமைச்சரைக் கொண்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டின் முதலீடும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6-7 சதவிகிதமாக இருக்கும். இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறியிருக்கும். அதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் எண்ணமும் கூட. இந்த இலக்கை எட்ட அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆயுஷ்மான் திட்டம் போன்றே 50-லிருந்து 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். 

இந்த ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிறப்பான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. நான் உலக வங்கியிடம் தனியார் துறைகள் புதிய மருத்துவனைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினேன். நீங்கள் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தொடங்க விரும்பினால் உலக வங்கி நீண்ட கால கடன் வழங்கத் தயாராக உள்ளது. அதற்கான வசதிகள் அரசினால் ஏற்படுத்தி தரப்படும். அதனால், தனியார் துறை தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்க முடியும். 

மருத்துவத் துறையில் தனியார் முதலீட்டினை ஈர்க்கும் விதமான சூழல் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒரு தொழில் முனைவோரா அல்லது தனியார் துறையோ சர்வதேச அளவில் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலையை மாற்றும்  முயற்சியில் அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது 65 சதவிகித மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி மூலம் பெற்றப்பட்டு வரப்படுகிறது என்றார்.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் பிரஜேஷ் பதக், சுகாதாரத் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு வருவதாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com