49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து விவாதிக்கவில்லை!

திரவநிலை வெல்லம் மற்றும் ஷார்ப்னர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் வரி விகிதம் குறைக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து விவாதிக்கவில்லை!

திரவநிலை வெல்லம் மற்றும் ஷார்ப்னர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் வரி விகிதம் குறைக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (பிப்ரவரி 18)  நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேசினோக்கள் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசப்படவில்லை. அளவு அடிப்படையில் பான் மசாலா மீது வரிவிதிப்பது குறித்து ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கை ஏற்கப்பட்டது. பென்சில் ஷார்ப்னருக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. திரவநிலை வெல்லத்தை சில்லரையில் விற்பனை செய்வதற்கான வரி சதவிகிதத்தை 18 சதவிகித்திலிருந்து முற்றிலும் நீக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேக் செய்யப்பட்டுள்ள திரவநிலை வெல்லத்துக்கு வரி சதவிகிதம் 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் இறுதித் தவணையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படுகிறது. மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகையினை வழங்குகிறது. இதன்மூலம் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியது நிறைவடைந்துள்ளது. உரிய காலத்தில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோறுக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தை முறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை 2022-23 நிதியாண்டிலிருந்து அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.5 கோடி ஈட்டும் நிறுவனங்கள் உரிய காலத்தில் ஜிஎஸ்டி கணக்கினைத் தாக்கல் செய்யத் தவறினால் கட்டணம் செலுத்தத் தவறும் நாளிலிருந்து நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் தாமதக் கட்டணமாக விதிக்கப்படும். அதேபோல ஆண்டு வருமானம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.20 கோடிக்குள் இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.100 தாமதக் கட்டணமாக பெறப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது, ஜிஎஸ்டி வரிக் கணக்கை உரிய காலத்தில் தாக்கல் செய்யத் தவறுவோருக்கு தாமதமாகும் நாளொன்றுக்கு ரூ.200 தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com