சிவசேனை கட்சி பெயர், சின்னத்தைப் பெற ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம்: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு!

சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வாங்குவதற்காக ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் நடந்துள்ளதாக சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவசேனை கட்சி பெயர், சின்னத்தைப் பெற ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம்: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு!

சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வாங்குவதற்காக ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் நடந்துள்ளதாக சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இந்த நிலையில், சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வாங்குவதற்காக ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத்தின் இந்த குற்றச்சாட்டினை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பில் பேசிய சதா சர்வங்கார், சஞ்சய் ரௌத் என்ன கணக்காளரா? என விமர்சித்துள்ளார். அதேபோல பாஜகவைச் சேர்ந்த சுதிர் முகந்தீவார், சஞ்சய் ரௌத்தின் இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுதந்திரமாக செயல்படும் உச்சநீதிமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது தாக்கிப் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் சஞ்சய் ரௌத் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிவசேனையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பெற ரூ.2000 கோடி முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது நூறு சதவிகிதம் உண்மை எனப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: சிவசேனை பெயர் மற்றும் சின்னத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக உள்ளவரிடமிருந்து இந்தத் தகவல் எனக்கு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் நடந்ததற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அதனை விரைவில் வெளியிடுவேன். சிவசேனை கட்சியின் பெயரினைப் பெற செலவிட்டுள்ளத் தொகை சிறியதல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒரு ஒப்பந்தம். இந்த ரூ.2000 கோடி ஒப்பந்தம் நடைபெற்றதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்தத் தொகை முதல் கட்ட தொகை மட்டுமே. இது 100 சதவிகிதம் உண்மை. இன்னும் பல உண்மைகள் வெளிவரவுள்ளன. இந்திய வரலாற்றில் இதற்கு முன்னதாக இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை.

சஞ்சய் ரௌத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக சார்பில் கூறியதாவது: சஞ்சய் ரௌத்தின் இந்த அர்த்தமற்ற பேச்சுகள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படும் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இது மாதிரியான கருத்துகளால் ஜனநாயகம் அவமதிக்கப்படுகிறது. மக்கள் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். அறிவை இழந்து சித்தம் குழம்பியவர்கள் கூறுவது போன்ற கருத்தினை அவர் கூறியுள்ளார் என்றனர்.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னமான வில் அம்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டனர். அதேபோல, இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை தீப்பந்தம் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com