சிவசேனை பெயர், சின்னம்: உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு

சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில் அதற்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில் அதற்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணி என இரண்டாக உள்ளது. இதில் எது உண்மையான சிவசேனை அணி என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடின. 

பெரும்பான்மையின்படி, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது. மேலும், கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தோ்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே அணியினா் ‘சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)’ என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே கொடுத்துள்ள மனு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிர அரசியல்: 

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தபோதும், முதல்வா் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்ட சிவசேனை, பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி எனும் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றாா்.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூனில் ஏக்நாத் ஷிண்டே (அப்போதைய அமைச்சா்) தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றதால், அவரது அரசு கவிழ்ந்தது. இதைத் தொடா்ந்து, ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணி, பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து ஆட்சியமைத்தது. முதல்வராக ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸும் பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com