ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பெண் அதிகாரிகள்: சசிகலா விவகாரத்தை எழுப்பியவரா?

கர்நாடக கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் டி. ரூபா ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி சிந்தூரி இருவரும் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொண்டனர்.
ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பெண் அதிகாரிகள்: சசிகலா விவகாரத்தை எழுப்பியவரா?


கர்நாடக கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் டி. ரூபா ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி சிந்தூரி இருவரும் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொள்வது குறித்து மாநில உள்துறை அமைச்சர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளையும் புகைப்படங்களயும் இருவரும் வெளியிட்டுவருவது கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இரண்டு மூத்த பெண் அதிகாரிகளும் பொதுமக்கள் மத்தியில் மிக மோசமாக நடந்து கொள்வது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் அமைச்சர் அரகா ஞானேந்திரா, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இங்கே நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இருவரும் பொது வெளியில் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள், சாதாரண மக்கள் கூட சாலைகளில் அவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊடகத்தின் முன்பு சரியாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டிருப்பது சரியல்ல என்று ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைப் பார்த்தால் பொதுமக்களுக்கு அதிக மரியாதை வரும். ஆனால், இந்த சம்பவத்தால், மக்களுக்கு இருந்த மரியாதை குறைந்துவிடும். நம்மிடம் மிகச் சிறந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் மாநில மற்றும் தேசியத்துக்காக உழைப்பவர்கள். இவர்களைப்போல ஒரு சிலரும் மரியாதையை குறைக்கும்வகையில் நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் டி. ரூபா, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பல்வேறு சலுகைகளை அனுபவித்தார் என்ற குற்றச்சாட்டை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com