ஷிண்டே கட்சிக்கு அங்கீகாரம்: தோ்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு அங்கீகாரம் வழங்கிய இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஷிண்டே கட்சிக்கு அங்கீகாரம்: தோ்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஷிண்டே கட்சிக்கு அங்கீகாரம்: தோ்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு அங்கீகாரம் வழங்கிய இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணைய உத்தரவை எதிா்த்து உத்தவ் தாக்கரே பிரிவு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்.எல்.ஏ.-க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். இதையடுத்து, இரு அணிகளாக சிவசேனை பிளவுபட்டது.

கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது; கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.

‘பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தோ்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிா்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று அவா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதின்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, உரிய நடைமுறைப்படி இது குறித்து செவ்வாய்க்கிழமை முறையிடுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் கிருஷ்ண முராரி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த மனு செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘தோ்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை எனில், கட்சியின் சின்னமும் வங்கிக் கணக்குகளும் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு முழுமையாகச் சென்றுவிடும். எனவே, மனுவை அரசியல் சாசன அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

மேலும், ‘முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருடைய பிரிவைச் சோ்ந்த சிவசேனை எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள தகுதிநீக்க நடவடிக்கை கோரிக்கை மீது உச்ச நீதிமன்றம் உரிய முடிவு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை மீது 7 நாள்களுக்குள் முடிவெடுக்க மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’ என்ற வழக்கத்துக்கு மாறான கோரிக்கை உத்தவ் தாக்கரே தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கு விவரங்களை முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. எனவே, இதன் மீதான விசாரணை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றனா்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு விளக்கத்தைக் கோரியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com