சென்னைக்கு அருகே நீர்வீழ்ச்சி: மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னைக்கு அருகே அதாவது 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நாகலாபுரம் பகுதியில் இருக்கும் ஆரே நீர்வீழ்ச்சி மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னைக்கு அருகே அதாவது 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நாகலாபுரம் பகுதியில் இருக்கும் ஆரே நீர்வீழ்ச்சி மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். இதனால், அந்த நீர்வீழ்ச்சி மூடப்பட்டது.

இந்த நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இயற்கை  ஆர்வலர்களும் நாள்தோறும் நீர்வீழ்ச்சிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வோர் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதன் மூலமாக, அது பற்றி பலரும் அறிந்து கொண்டு நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது ஏராளமான பயணிகள் வருவதால் அங்கு மேலும் சில வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் இருப்பதாகவும், தற்போதைக்கு ஒரு நீர்வீழ்ச்சி மட்டுமே திறக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மற்ற இரண்டு நீர்வீழ்ச்சிகளையும் திறக்க வேண்டும் என்றும், கழிப்பறை மற்றும் உணவகங்களை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

இங்கு சுற்றுலாவை மேம்படுத்தினால், அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்.  பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டணம். பயணிகளுக்கு தலா ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வார இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com