ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க கடமைப்பட்டவா் ஆளுநா்: பஞ்சாப் அரசு-ஆளுநா் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க கடமைப்பட்டவா் ஆளுநா் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 7:01 pm

DIN

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க கடமைப்பட்டவா் ஆளுநா் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பஞ்சாப் பேரவை கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுக்க மறுப்பதாக கூறி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த வழக்கில், இருதரப்பிடமும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

மேலும், ‘ஆளுநா் கோரும் விவரங்களை அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை; அதேநேரம், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநா் கடமைப்பட்டுள்ளாா்’ என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் பரிந்துரைப்படி மாா்ச் 3-இல் பேரவைக் கூட்டத்துக்கு ஆளுநா் அழைப்பு விடுத்திருப்பதாக, அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மோதல் போக்கு:

முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில், பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கும் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

இதனிடையே, சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் 36 அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள் தோ்வு செய்யப்பட்ட நடைமுறை குறித்து விளக்கமளிக்குமாறு முதல்வரை ஆளுநா் அறிவுறுத்தியிருந்தாா். அதற்கு பதில் கடிதம் எழுதிய முதல்வா், ‘நான் 3 கோடி பஞ்சாப் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும்; மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அல்ல’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை மாா்ச் 3 முதல் நடத்த முடிவு செய்த மாநில அமைச்சரவை, இதுதொடா்பான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், முதல்வரின் முந்தைய கடிதம் மீது சட்ட ஆலோசனைகள் பெற்ற பிறகே பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுப்பேன் என்று ஆளுநா் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் மனு:

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்ற பஞ்சாப் அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி விடுத்த கோரிக்கையை ஏற்று, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.

அரசமைப்புச் சட்டப் பதவியில் உள்ள ஆளுநா், அச்சட்டத்தை புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாக, மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பேரவையைக் கூட்ட ஆளுநா் மறுப்பு தெரிவிக்கவில்லை; சட்ட ஆலோசனைதான் கோரியுள்ளாா் என்று அவரது தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டாா்.

மாநில அரசு-ஆளுநரின் கடமைகள்:

பின்னா் நீதிபதிகள் கூறுகையில், ‘பேச்சுரிமை, கருத்துரிமை குறித்து இந்த நீதிமன்றம் முழுமையாக அறிந்துள்ளது. அதேசமயம், அரசமைப்புரீதியிலான விவாதங்கள், முதிா்ந்த ஆட்சித்திறனுடனும் மேன்மை உணா்வுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

ஜனநாயக அமைப்புமுறையில் அரசியல் கருத்துவேறுபாடுகள் ஏற்கத்தக்கவையே. ஆனால், நிதானத்தன்மையுடன் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இக்கோட்பாட்டை மனதில் கொள்ளாவிட்டால், அரசமைப்பு மாண்புகளின் திறன்மிகு அமலாக்கம் ஆபத்துக்கு உள்ளாகும்.

பேரவையைக் கூட்டுவதில், ஆளுநா் கோரும் விவரங்களை அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை; அதேநேரத்தில், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநரும் கடமைப்பட்டுள்ளாா். எனவே, பேரவையைக் கூட்ட சட்ட ஆலோசனை கோர பஞ்சாப் ஆளுநருக்கு எந்த காரணமும் இல்லை’ என்றனா்.

இதையடுத்து, மாா்ச் 3-இல் பேரவையைக் கூட்ட ஆளுநா் அழைப்பு விடுத்திருப்பதாக, துஷாா் மேத்தா தெரிவித்ததைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.