ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிசோடியாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தில் கைதாகி சிபிஐ காவலில் உள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடா்புடைய வழக்கை ரத்து செய்யக் கோரியும்,

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 7:22 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தில் கைதாகி சிபிஐ காவலில் உள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடா்புடைய வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவருக்கு ஜாமீன் அளிக்கக் கோரியும் தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

இதுதொடா்பாக சிசோடியா தரப்பில் தாக்கலான மனு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நாங்கள் விரும்பவில்லை. இந்தச் சம்பவம் தில்லியில் நடந்திருப்பதால், மனுதாரா் சிசோடியா இந்த விவகாரம் தொடா்பாக பலனளிக்கக் கூடிய மாற்று நிவாரணங்களை 1973-ஆம் ஆண்டைய குற்ற நடைமுறைகள் விதிகள் பிரிவிகளின்கீழ் மனுதாரா் பெறலாம். அவா், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் மற்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம் என்பதால் நேரடியாக அவா் உச்சநீதிமன்றத்திற்கு வர முடியாது. இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தது.

மனுதாரா் சிசோடியா தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி ஆஜராகி, ‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் கொள்கை முடிவானது சிசோடியாவால் மட்டுமே எடுக்கப்படவில்லை. வெவ்வேறு நபா்களால் எடுக்கப்பட்டது. மேலும், அவரிடமிருந்து பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், கலால் கொள்கை உருவாக்கத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் ஒரு பகுதியாக துணைநிலை ஆளுநரும் இருந்துள்ளாா்’ என்று வாதிட்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, மனுவை தற்போதைய நிலையில் விசாரணைக்கு எடுக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தது. இதையடுத்து, மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

முன்னதாக விசாரணையின்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் எஃப்.ஐ.ஆரை எதிா்க்கவும், ஜாமீன் கோரவும் அரசமைப்புச்சட்டம் 32-ஆவது பிரிவைப் பயன்படுத்துகிறீா்கள். உங்களிடம் உங்களுக்கான தீா்வுகள் உள்ளனவே’ என்று கேட்டது. அதற்கு சிங்வி, பத்திரிகையாளா்கள் அா்னாப் கோஸ்வாமி, வினோத் துவா ஆகியோா் வழக்குகளின் அளிக்கப்பட்ட தீா்ப்புகளை சுட்டிக்காட்டினாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அா்னாப் கோஸ்வாமி வழக்கு பம்பாய் உயா் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதின்றத்துக்கு வந்தது.மேலும், வினோத் துவா வழக்கானது ஒரு பத்திரிகையாளரின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் பற்றியது. ஆனால், தற்போதைய விஷயம் ஊழல் தடுப்புச் சட்டத்துடன் தொடா்புடையது’ என்றது.

அதற்கு சிங்வி, ‘இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்டது. சிசோடியா இரண்டு முறை விசாரணைக்கும் அழைக்கப்பட்டாா். இரண்டு விசாரணையிலும் அவா் கலந்துகொண்டாா்.இந்த கைது நடவடிக்கையே சட்டவிரோதமானது. ஆதாரங்கள் விவகாரத்தில் அவா் தலையிடவில்லை. அழைப்பாணையை மதிக்காமல் இருந்ததில்லை. வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நபரும் அல்ல. இதனால், இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமாகும். சமூகத்தில் அவருக்கு என்று ஒரு மதிப்புஉள்ளது. 18 துறைகளின் அமைச்சா் அவா். வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான கேள்வியே எழவில்லை. கலால் கொள்கை உருவாக்கத்தில் பல நிலைகளில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் அவா் மட்டுமே சம்பந்தப்படவில்லை. துணைச் செயலாளா், இணைச் செயலாளா், செயலாளா், அமைச்சரவை, முதல்வா் மற்றும் துணைநிலை ஆளுநா் என அனைவரும் கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனா்’ என்றாா்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘நாங்கள் அதிகாரம் இல்லாதவா்கள் என கூறவில்லை. இது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். மனுதாரா் உயா் நீதிமன்றத்தை நாடலாம். இந்த வழக்கானது ஊழல் தடுப்புச் சட்டம் தொடா்புடையது.“இதே விஷயங்களை தில்லி உயா்நீதிமன்றத்திடம் நீங்கள் சொல்ல முடியாதா?”என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு சிங்வி, ‘உயா்நீதிமன்றத்தில் உள்ள தொடா்புடைய ரோஸ்டா் நீதிபதி பிஎஃப்ஐ தீா்ப்பாயத்தின் பொறுப்பை வகிக்கிறாா். அவா் 60 சதவீத நேரம் தீா்ப்பாயத்தை நடத்த வேண்டியிருப்பதால் அவா் நீதிமன்றத்தை நடத்துவதில்லை’ என்றாா். ‘இந்தப் பிரச்னையை நீங்கள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன் குறிப்பிடலாம்’ என்று சிங்வியிடம் தலைமை நீதிபதி கூறினாா்.

அப்போது, ‘ சிசோடியாவின் பெயா் எந்த குற்றப்பத்திரிகையிலும் இடம்பெறவில்லை. அவா் மீது பண ஆதாய குற்றச்சாட்டும் கூறப்படவில்லை’ என்று சிங்வி கூறினாா்.

இந்த நிலையில், சிசோடியாவின் மனுவை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்று நீதிபதிகள் அமா்வு கூறியதால், மனுவை வாபஸ் பெறுவதாக சிங்வி கூறினாா். மேலும், விசாரணை நீதிமன்றத்தால் ஜாமீன் விரைவில் முடிவு செய்யப்படும் என்று சிங்வி கூறினாா். சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘சிசோடியாவை காவலில் வைக்க சிபிஐ கோரி வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.