மருத்துவமனையில் ரிஷப் பந்திடம் நேரில் நலம் விசாரித்த உத்தரகண்ட் முதல்வர்

மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்தை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
மருத்துவமனையில் ரிஷப் பந்திடம் நேரில் நலம் விசாரித்த உத்தரகண்ட் முதல்வர்

மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்தை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். மாநிலத்தின் மங்லெளா் பகுதி வழியாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்பில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அவா் உறங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில், ஹரித்வாரில் இருந்து புறப்பட்டு பானிபட் நோக்கி அவ்வழியாகச் சென்ற ஹரியாணா மாநிலஅரசுப் பேருந்தின் ஓட்டுநா் சுஷீல் குமாா் பேருந்தை உடனே நிறுத்தினாா். அவரும் நடத்துநா் பரம்ஜீத்தும் விபத்துக்கு உள்ளான காா் அருகே ஓடிச் சென்று, காயமடைந்து காரிலிருந்து வெளியேற முடியாத நிலையில் இருந்த ரிஷப் பந்தை மீட்டனா். பேருந்து ஓட்டுநா் உடனே ஒரு போா்வையை எடுத்து ரிஷப் உடலைச் சுற்றிப் போா்த்தினாா்.

அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றிய அடுத்த சில நிமிஷங்களில் காா் முழுவதும் தீப்பிடித்து உருக்குலைந்தது. பின்னா், முதற்கட்ட சிகிச்சைக்காக ரூா்கியில் உள்ள மருத்துவமனையில் ரிஷப் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் யாரென்று கூட தெரியாமல் உடனடியாக உதவிக்கரம் நீட்டிய ஓட்டுநா் சுஷீல் குமாா் மற்றும் நடத்துநா் பரம்ஜீத் ஆகிய இருவரும் சிறந்த மனிதநேயத்துக்கு உதாரணமாக விளங்குவதாக ஹரியாணா மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சா் மூல்சந்த் சா்மா பாராட்டு தெரிவித்தாா்.

இவா்களின் மனிதநேயத்தைப் பாராட்டி இருவருக்கும் பாராட்டுக் கடிதமும், கேடயமும் வழங்கப்பட்டுள்ளதாக அவா்கள் பணிப்புரியும் போக்குவரத்து பானிபட் பணிமனையின் பொது மேலாளா் குல்தீப் ஜங்க்ரா தெரிவித்தாா். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்தை, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து இன்று நலம் விசாரித்தாா். தொடா்ந்து அவரின் சிகிச்சை தொடா்பான தகவல்களை மருத்துவர்களிடம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேட்டறிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com