மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வேலை: ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை!

ராஜஸ்தானில் பெண்கள் மாதவிடாய் நாள்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு சமூக நல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 
மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வேலை:  ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை!

ராஜஸ்தானில் பெண்கள் மாதவிடாய் நாள்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு சமூக நல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 

ராஜஸ்தான் மாநில சமூக நல வாரியத்தின் கூட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பெண்கள், பெண் குழந்தைகளுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதில் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நாள்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

குடும்ப ஆலோசனை மையம், முதியோர் இல்ல அறுவை சிகிச்சை, சர்வதேச மொழி கற்பித்தல் மையம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சமூக நல வாரியத் தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில், 'மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த மற்றும் சமூக நலனுக்கான பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் நோக்கத்துடன் வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரியமும் அவ்வப்போது தனது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் மாநில, மாவட்ட மற்றும் பஞ்சாயத்து சமிதி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். அதில் குட் டச்-பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க ஆலோசனை மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தேவைப்பட்டால் தகுந்த சட்ட உதவியும் வழங்கப்பட வேண்டும்.

6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பராமரிப்புடன், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான கல்வி பொழுதுபோக்குடன் ஊட்டச்சத்தும் உறுதி செய்யப்பட வேண்டும். 

பல்வேறு சர்வதேச மொழிகளை கற்பிக்க, சர்வதேச மொழி கற்பித்தல் மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் இளைஞர்கள் மொழியை கற்று வேலைவாய்ப்பு பெறுவர்.

இவை தவிர, மாநில அரசின் பல்வேறு திட்டங்களை ஊக்குவிப்பதற்கான மாநில, மாவட்ட அளவிலான கருத்தரங்குகள், போதை ஒழிப்புத் திட்டம், சமூக நல வாரியம் மூலம் முதியோர் இல்லங்கள் நடத்துதல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகளை சேகரித்து மாநில வாரியத்தில் சேர்ப்பது தொடர்பான திட்டங்களும் அரசு பரிந்துரைக்கப்பட உள்ளன' என்றார். 

இதையும் படிக்க | ஹெட்ஃபோன் போடாதீங்க..!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com