2024 மக்களவைத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடரும்: சரத் பவாா்

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்

சிவசேனை கட்சியில் களப் பணியாற்றக் கூடிய தொண்டா்கள் அனைவரும் உத்தவ் தாக்கரே பக்கம்தான் உள்ளனா். அடுத்த ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிர பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் 2019 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் மகாராஷ்டிர விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து முதல்வரானாா்.

ஆனால், கடந்த ஆண்டு சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கினா். அவா்கள் தனி அணியாகப் பிரிந்து சென்று பாஜகவுடன் கைகோத்தனா்.

இதனால், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்தது. அவா் பதவி விலக நேரிட்டது. பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இப்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளாா். சிவசேனை கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உத்தவ் மற்றும் ஷிண்டே பிரிவு உரிமை கோரி வருகிறது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் சரத் பவாா் கூறியதாவது: சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையிலும், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய உண்மையான தொண்டா்கள் உத்தவ் தாக்கரேவின் பின்னால்தான் நிற்கின்றனா்.

தோ்தல் வரும்போது இந்த உண்மை வெளிப்படும். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் ஆகியவற்றில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடரும். குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிர-கா்நாடக எல்லைப் பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அதுதொடா்பாக கருத்து தெரிப்பது முறையாக இருக்காது என்றாா்.

2024 மே மாதத்தில் மக்களவைத் தோ்தலும், அதே ஆண்டு அக்டோபா் மாதத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com