பெங்களூரு கோர விபத்து: பிள்ளைகளுக்காக வீட்டிலிருந்தே வேலையை வேண்டாம் என்ற மென்பொறியாளர்

பெங்களூருவில் மெட்ரோ கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டுக்கம்பி தூண் கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அது விழுந்ததில் தாய் -மகன் இறந்தனா்.
பெங்களூருவில் கோர விபத்து: உயிரைக் குடிக்க தள்ளாடிக்கொண்டிருந்த கட்டுக்கம்பி தூண்
பெங்களூருவில் கோர விபத்து: உயிரைக் குடிக்க தள்ளாடிக்கொண்டிருந்த கட்டுக்கம்பி தூண்
Published on
Updated on
2 min read


பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டுக்கம்பி தூண் கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அது விழுந்ததில் தாய் -மகன் இறந்தனா்.

சம்பவ இடத்தை நேரில் பார்த்தவர்கள் அனைவருமே ஒன்றுபோல, கடந்த ஐந்து நாள்களாக ஆடிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரும் எதுவுமே செய்யவில்லை. அது நிச்சயம் ஏதோ விபரீதத்துக்காகக் காத்திருக்கிறது என்று தோன்றிக் கொண்டேயிருந்தது என்கிறார்கள்.

பெங்களூரு, நாகவராவில் ஹென்னூரில் வசித்து வருபவா் லோஹித்குமாா். இவா், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேஜஸ்வினியும் (35), மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு மகன் விஹான், மகள் ஆகியோா் உள்ளனா். இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆகிறது. குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு, தம்பதியா் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். எச்.பி.ஆா்.லே அவுட் அருகில் வெளிவட்டச் சாலையில் மெட்ரோ ரயில் தடத்திற்கான தூண் அமைக்கும் பணி நடந்துவருகிறது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டுக்கம்பி தூண் செவ்வாய்க்கிழமை காலை 10.30மணி அளவில் திடீரென சரிந்துவிழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லோஹித்குமாா், அவரது மனைவி தேஜஸ்வினி, மகன் விஹான், மகள் ஆகியோா் சிக்கிக்கொண்டனா்.

இதில் லோஹித்தும், மகளும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். எனினும், தேஜஸ்வினி, விஹான் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவா்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மேலும் அதிக அளவில் ரத்தம் வெளியேறிவிட்டதும், அதனால் ரத்த அழுத்தம் குறைந்ததும் இறப்புக்கு காரணமாகிவிட்டது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். 

இது குறித்து கோவிந்தபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவட்டச் சாலை பகுதியில் 2021ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட தூண்களின் கட்டுக்கம்பிகள் நீண்டகாலமாக பூசாமலே வைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா். மேலும் மிகவும் ஆபத்தான நிலையில் கம்பிகளின் தூண் இருந்ததைக் கவனிக்க மெட்ரோ ரயில் அதிகாரிகள் தவறிவிட்டதால்தான் இந்த விபத்து நடந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மெட்ரோ கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறி, அப்பகுதியில் போராட்டமும் நடைபெற்றது.

இப்பகுதியில் மெட்ரோ கட்டுமானப் பணி நடக்கத் தொடங்கியது முதலே, அந்தச் சாலையைக் கடந்து செல்ல அச்சமாக இருப்பதாகவும், அவர்களது அச்சம் இன்று நடந்தே விட்டதாகவும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்பகுதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் குடிவந்ததும், வீட்டிலிருந்து பணியாற்றி வந்த தேஜஸ்வினி, பிள்ளைகளை மழலையர் பள்ளியில் சேர்த்துவிட்டதால் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்துதான் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கியதும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com