
பாதுகாப்பில்லாததாக மாறிக் கொண்டிருக்கிறதா ஆன்லைன் பேங்கிங்?
வதோதரா: உங்கள் ஆன்லைன் வங்கியில் புதிதாக யாருடைய வங்கிக் கணக்காவது பயனாளியாக (பெனிஃபிஷியரி) சேர்க்கப்பட்டிருந்தால், உடனடியாக அதனை நீக்கிவிட்டு, சைபர் கிரைம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பது அவசியம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, ஒருவருடைய வங்கிக் கணக்கில் அறிமுகமில்லாத நபர்களின் கணக்குகள் பயனாளியாக சேர்க்கப்பட்டிருந்து, அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், அதன் மூலம் பணம் மோசடி செய்யப்படும் அபாயம் இருக்கிறதாம்.
இதையும் படிக்க.. குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்
இது தொடர்பாக வதோதராவில் காவல்துறையினருக்கு சில புகார்கள் வந்துள்ளன.
இந்த புகார்கள், ஆன்லைன் வங்கி முறையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தைக் கிளப்புகிறது. இது தொடர்பாக புகாரில், ஒருவரது ஆன்லைன் வங்கிக் கணக்கில் அறிமுகமில்லாத நபரின் பெயர் பயனாளியாக இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நபர், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என்று லேசாக விட்டுவிட்டார்.
ஆனால், ஒரு நாள் அந்த வங்கிக் கணக்குக்கு, அந்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் அனுப்பப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் பயனாளரை சேர்க்கும் போதும் சரி, பணம் மோசடி செய்யும் போதும் சரி ஒடிபி எதுவும் வரவில்லை என்பதுவே.
இதையும் படிக்க.. பெங்களூரு கோர விபத்து: பிள்ளைகளுக்காக வீட்டிலிருந்தே வேலையை வேண்டாம் என்ற மென்பொறியாளர்
இது தொடர்பாக மூன்று புகார்கள் வந்திருப்பதாகவும், மோசடியாளர்கள், பணத்தை இழந்தவர்களின் சிம் கார்டை போலியாக தயாரித்து அல்லது செயலியைக் கொண்டு சுவாப் சிம் நுட்பம் மூலம் ஓடிபி வராமல் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்த போதும், இவர்களது சிம் கார்டுகள் ஆக்டிவாகவே இருந்துள்ளன. எனவே, வங்கிகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டு, எங்கேனும் தொழில்நுட்பக் குறைபாடு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் பேங்கிங் வைத்திருப்போர், அவ்வப்போது தங்களது பயனாளிகளின் பட்டியலை சரிபார்த்துக் கொள்வது நல்லது என்றும், பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளை இணைத்திருந்தால் டெலீட் செய்வதும் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.