பெங்களூரு, நாகவராவில் ஹென்னூரில் வசித்து வருபவா் லோஹித்குமாா். இவா், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேஜஸ்வினியும் (35), மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு மகன் விஹான், மகள் ஆகியோா் உள்ளனா். இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆகிறது. குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு, தம்பதியா் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். எச்.பி.ஆா்.லே அவுட் அருகில் வெளிவட்டச் சாலையில் மெட்ரோ ரயில் தடத்திற்கான தூண் அமைக்கும் பணி நடந்துவருகிறது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டுக்கம்பி தூண் செவ்வாய்க்கிழமை காலை 10.30மணி அளவில் திடீரென சரிந்துவிழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லோஹித்குமாா், அவரது மனைவி தேஜஸ்வினி, மகன் விஹான், மகள் ஆகியோா் சிக்கிக்கொண்டனா்.