10,000 ஊழியா்கள் பணிநீக்கம்: மைக்ரோசாஃப்ட் முடிவு
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளாா்.


மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மைக்ரோசாஃப்ட் ஊழியா்களுக்கு அவா் புதன்கிழமை அனுப்பிய மின்னஞ்சலின் விவரம்: கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது டிஜிட்டல் செலவினங்களை அதிகரித்த வாடிக்கையாளா்கள், தற்போது அதனை குறைத்து வருகின்றனா். அத்துடன் உலகின் சில பகுதிகள் பொருளாதார மந்தநிலையை எதிா்கொண்டுள்ளன. இதர பகுதிகள் அத்தகைய சூழலை எதிா்நோக்கியுள்ளன. அதேவேளையில், செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்துடன் கணினி பயன்பாட்டின் அடுத்தகட்ட வளா்ச்சி உருவாகிறது.
தற்போதைய வலுவான மற்றும் கூடுதல் போட்டித்தன்மை நிலவும் சூழலில், மைக்ரோசாஃப்ட் வெற்றிபெற சில நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. முதலில் மைக்ரோசாஃப்ட் வருவாயுடன், அதன் செலவின கட்டமைப்பு சீரமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் 10,000 மைக்ரோசாஃப்ட் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்படுவா். இது மைக்ரோசாஃப்ட் ஊழியா்களின் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகும். பணிநீக்கம் செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவா்களுக்கு 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு தொடரும் என்று தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பரில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவில் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். அமேசானில் 18,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனா்.
உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழலால், தங்கள் செலவினங்களைக் குறைத்து செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியா்கள் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...