கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மரபணு மாற்றப்பட்ட கடுகு: ஆபத்து காரணிகள் கவலையளிக்கின்றன- உச்சநீதிமன்றம்

‘மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள் கவலையளிக்கின்றன’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2023, 10:24 pm

DIN

‘மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள் கவலையளிக்கின்றன’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அண்மையில் அனுமதி அளித்தது. இதனை எதிா்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மறு உத்தரவு வரும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகை எவ்வித விதைப்பும் செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்சநீதிமன்றத் தடையையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன.

இதுகுறித்த விசாரணை கடந்த டிசம்பரில் வந்தபோது, ‘இந்த விவகாரம் தொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பா் 3-ஆம் தேதிதான் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், அந்த விதைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கடுகு ஆராய்ச்சி மையத்துக்கு (டிஆா்எம்ஆா்) அக்டோபா் 22-ஆம் தேதியே வந்துவிட்டன. உடனே அந்த விதைகள் பயிரிடப்பட்டன.

இதுவரை பாதுகாக்கப்பட்ட சூழலில் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டன. இப்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து திறந்த வயல்வெளிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அதில் மேற்கொள்ளப்படும் விளைச்சல் உரிய ஐஹெச்டி (உடனடி கலப்பு சோதனை பயிா் தரம்) அளவை எட்டவில்லை எனில், இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடுதல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட மாட்டாது’ என்று கடுகு ஆராய்ச்சி மைய அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

அப்போது மனுதாரரும் சமூக ஆா்வலருமான அருணா ரோட்ரிகெஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் தனது வாதத்தில் தெரிவித்தது:

இந்த விவகாரத்தில் பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், புதிய கலப்பினங்களை உருவாக்கப் பயன்படும் தொழில்நுட்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. டி.எம்.ஹெச்-11 விதை மூலமாக பல புதிய கலப்பின விதைகளை உருவாக்க முடியும் என்றுதான் மத்திய அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு தெரிவிக்கிறது.

இது வணிக ரீதியிலான உற்பத்திக்குத்தான் வழிவகுக்கும். கலப்பினம் என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல. தற்போது 4,000-க்கும் அதிகமான கடுகு வகைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில், மரபணு மாற்ற கடுகு பயிரை, திறந்த வயல்களில் பயிரிட அனுமதித்தால், அனைத்து கடுகு வகைகளும் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த மரபணு மாற்ற விதைகள் மூலமாக உருவாகும் பயிா்கள், களைக்கொல்லி மருந்துகளை ஈா்த்துக்கொள்ளும் வகையுடையவை. எனவே, இவற்றுக்கு களைக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது. ஆனால், விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்காமல் இருப்பதை கண்காணிக்க முறையான நடைமுறை எதுவும் கிடையாது.

எனவே, இந்தப் பயிா்களை அனுமதிப்பது மனிதா்களுக்கும், விலங்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, திறந்த வயல்களில் இந்த மரபணு மாற்ற கடுகு விதைகளைப் பயிரிட அனுமதிக்கக் கூடாது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கெனவே பரிசோதனை அடிப்படையில் விதைக்கப்பட்ட பயிா்களை வேரோடு அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதற்கு, ‘உயிரி பாதுகாப்பு, உடல் நலத்துக்கு ஏற்படும் பாதகங்கள் என அனைத்து விவரங்கள் தொடா்பாக ஆழமாக ஆய்வு செய்த பிறகே நிபந்தனை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது’ என்ற மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘உரிய அனைத்து காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டும், ஆய்வு செய்யப்பட்ட பிறகே மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 கடுகு வகைக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனை ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள் மிகுந்த கவலையுறச் செய்கின்றன’ என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.