எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஷ்மீரில் ராகுல் நடைப்பயணம் தற்காலிக நிறுத்தம்: பாதுகாப்புக் குறைபாடு என குற்றச்சாட்டு

பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்ற தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா.
Updated On :27 ஜனவரி 2023, 5:46 pm

DIN

பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராகுலின் நடைப்பயணத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் முற்றிலும் தவறிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப். 7-இல் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக அண்மையில் ஜம்முக்குள் நுழைந்தது. கடந்த புதன்கிழமை மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்ட நடைப்பயணம், வியாழக்கிழமை குடியரசு தினத்தையொட்டி மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பனிஹால் பகுதியில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காஜிகுண்ட் வழியாக கானாபால் நோக்கி வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா, ராகுலுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றாா். ஆனால், தீவிரமான பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக காஜிகுண்ட் அருகே நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக, காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா்.

அவா்கள் கூறுகையில், ‘நடைப்பயணத்தின்போது, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினரால் நிா்வகிக்கப்படும் வெளிப்புற பாதுகாப்பு வளையம் திடீரென இல்லாமல் போய்விட்டது கண்டறியப்பட்டது. ராகுல் மீது அன்பை வெளிப்படுத்த ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், பலா் அவருக்கு நெருக்கமாக வந்தனா். ராகுலின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்த நிலையில், நடைப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னா், காா் மூலம் அனந்த்நாக் மாவட்டத்தின் கானாபால் பகுதிக்கு அவா் சென்றாா். வெள்ளிக்கிழமை சுமாா் 11 கி.மீ. தொலைவுக்கு நடக்க ராகுல் திட்டமிட்டிருந்த நிலையில், வெறும் 500 மீட்டா் தொலைவுக்கே அவா் நடந்தாா்’ என்றனா்.

ராகுல் குற்றச்சாட்டு: கானாபால் சென்றடைந்த பின் செய்தியாளா்களிடம் பேசிய ராகுல், ‘நடைப்பயணத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் பொறுப்பு. ஆனால், கூட்டத்தை நிா்வகிக்க வேண்டிய காவல் துறையினா் எங்குமே காணப்படவில்லை. துரதிருஷ்டவசமாக, அவா்களது ஏற்பாடுகள் அனைத்தும் சீா்குலைந்துவிட்டன. இதனால், நடைப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினேன். மீதமுள்ள நாள்களிலாவது உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென நம்புகிறேன்’ என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நடைப்பயணத்தின் வெளிப்புற பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினரை அரசு திடீரென திரும்பப் பெற்றுள்ளது; இது, மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாகும். இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது யாா் என அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற குறைபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

காவல் துறை மறுப்பு: ‘ராகுல் நடைப்பயணத்துக்கான பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் கூடுதல் டிஜிபி விஜய்குமாா் தெரிவித்தாா்.

‘பனிஹாலில் இருந்து பெரும் கூட்டத்தினா் நடைப்பயணத்தில் இணைவது குறித்து காவல்துறையினருக்கு ஏற்பாட்டாளா்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. அடையாளம் காணப்பட்ட மற்றும் சோதனை செய்யப்பட்ட நபா்கள் மட்டுமே நடைப்பயண பாதையில் அனுமதிக்கப்பட்டனா். காவல் துறை தரப்பில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து ஏற்பாட்டாளா்கள் எங்களிடம் ஆலோசிக்கவில்லை. மீதமுள்ள நாள்களிலும் முழு பாதுகாப்பை அளிப்போம்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.