பிரதமர் மோடியின் 4 வந்தே பாரத் ரயில் தொடக்க விழாச் செலவு ரூ.5.6 கோடி!

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் 4 நிகழ்ச்சிகளுக்கு ரூ.5.6 கோடி இந்திய ரயில்வே துறையால் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 4 வந்தே பாரத் ரயில் தொடக்க விழாச் செலவு ரூ.5.6 கோடி!
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் 4 நிகழ்ச்சிகளுக்கு ரூ.5.6 கோடி இந்திய ரயில்வே துறையால் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹௌரா வரை, ராஜஸ்தானின் அஜ்மெரில் இருந்து தில்லி வரை, கேரளத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை, தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.5.6 கோடி ரயில்வே துறையால் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்வியினால் தெரிய வந்துள்ளது. 

கடந்த மே மாதம் 18 ஆம் தேதி ஒடிசாவின் பூரி மற்றும் மேற்குவங்கத்தின் ஹௌரா வரை இயக்கப்படும் வந்தே பாரத் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ரூ.2.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ரயில்சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின் இடி விழுந்ததில் வந்தே பாரத் ரயில் அடுக்குகள் சேதமடைந்ததாக மே 22 ஆம் தேதி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், ஒடிசா ரயில் விபத்தின் காரணத்தினால் வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  அதேபோல தில்லியில் வந்தே பாரத் நிகழ்ச்சிக்காக ரூ.48,26,870 செலவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தேபாரத் நிகழ்ச்சிக்காக ரூ.1.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் சேவை நிகழ்ச்சிக்காக ரூ.1.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்று கோடிக்கணக்கில் செலவிடப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அஜய் போஸ் என்பவரின் கேள்வியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

வந்தே பாரத் தொடக்க நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படும் தொகை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: இந்த அரசு நிகழ்ச்சிகளுக்காக நடைபெறும் அரசாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் இதுவரை 67,000 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  வந்தே பாரத் ரயில்களுக்காக கோடிக்கணக்கில் ஆடம்பரமாக அரசு செலவிடுகிறது. ஆனால், தினசரி ஏழை மக்கள் பயணம் செய்யும் பயணிகளுக்கான ரயில்களை இயக்குவது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com