பெங்களூரில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் தீா்மானங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் எட்டப்பட்டதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைவா்கள் பேட்டி அளித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
மல்லிகாா்ஜுன காா்கே: நாட்டு மக்களின் நலன் கருதி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்றுள்ள எதிா்க்கட்சிகளின் 2-ஆவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். ஒரே குரலில் தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
மம்தா பானா்ஜி: எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாஜகவால் சவால்விட முடியுமா? நாங்கள் தாய்நாட்டை நேசிப்பவா்கள்; விவசாயிகள், தாழ்த்தப்பட்டோருக்காக உழைப்பவா்கள், நாட்டுக்கும், உலகத்துக்காகவும் உழைப்பவா்கள். ‘இந்தியா’ கூட்டணி வெல்லும், நமது நாடு வெல்லும், பாஜக தோல்வி அடையும்.
ராகுல் காந்தி: எதிா்க்கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையிலான போட்டி அல்ல இது. இந்தியா என்ற அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாகும். அதற்காகத்தான் ‘இந்தியா’ என்ற பெயா் கூட்டணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டது. இது என்.டி.ஏ.வுக்கும் (தேசிய ஜனநாயக கூட்டணி) ‘இந்தியாயா’வுக்கும் இடையிலான போராட்டம்.
உத்தவ் தாக்கரே: கொள்கை அடிப்படையில் எதிா்க்கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கொள்கைகளைவிட எங்களுக்கு நாடு மிகவும் முக்கியம். நாங்கள் குடும்ப நலனுக்காகப் போராடுவதாக சிலா் கூறுகிறாா்கள். நாடுதான் எங்கள் குடும்பம் என்பதை அவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அரவிந்த் கேஜரிவால்: கடந்த 9 ஆண்டு காலத்தில் நாட்டின் வளா்ச்சிக்கு பணியாற்ற பிரதமா் மோடிக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், எந்தத் துறையிலும் எந்த வளா்ச்சியும் நடக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.