ஒரே கிளிக்.. முக்கிய நூலகங்களின் புத்தகங்களை படிக்கும் வசதி

நாடு முழுவதுமிருக்கும் முக்கிய நூலகங்களின் புத்தகங்களை இணையதளம் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
குதா பக்‌ஷ ஓரியண்டல் பொது நூலகம் - பாட்னா
குதா பக்‌ஷ ஓரியண்டல் பொது நூலகம் - பாட்னா
Published on
Updated on
2 min read


நாடு முழுவதுமிருக்கும் முக்கிய நூலகங்களின் புத்தகங்களை இணையதளம் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

நாட்டின் மிக முக்கிய நூலகங்களான, நாடாளுமன்ற நூலகம், பிரதமர் அலுவலக அருங்காட்சியகம் மற்றும் நூலகம், குடியரசுத்தலைவர் மாளிகை நூலகம் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் எண்ம மயமாக்கி, ஒரே கிளிக்கில் அவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டத்தில், முதற்கட்டமாக 13 நூலகங்கள் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து மக்களிடமிருந்து வரும் கருத்துகளைத் தொடர்ந்து, நாட்டின் மற்ற முக்கிய நூலகங்களின் நூல்கள் நகலெடுக்கும் பணி நடைபெறும் என்று மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள நூலகங்களில், இந்திரா காந்தி தேசிய கலை மையம், கொல்கத்தா தேசிய நூலகம், புது தில்லி மற்றும் குடா பக்ஷ் ஓரியண்டல் பொது நூலகம் உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்திய கலாசார இணையதளத்தில், மத்திய அரசின் கருவூலம் இணைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால், ஒரே தேசம், ஒரே நூலகம் என்ற கொள்கையை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் ஆகஸ்ட் 5-6ஆம் தேதிகளில் நடைபெறும் நூலகத் திருவிழாவின் போது, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் தொடங்கி வைக்கப்படவிருக்கும் இந்த நூலகத் திருவிழாவின்போது, நாடு முழுவதும் உள்ள நூலகங்களை தரவரிசைப்படுத்தும் நடைமுறையும் அறிமுகம் செய்துவைக்கப்படவிருக்கிறது.  மேலும், பல்வேறு விதமான கண்காட்சிகளையும் அப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்மூலம், உலகம் முழுவதும் இருக்கும் நூலகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், நூலகங்களை நவீனமயமாக்க மற்றும் எண்ம முறையில் மாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். 
இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் வட்டமேஜை விவாதத்தில், நாட்டில் மற்றும் உலகில் உள்ள மிகச் சிறந்த நூலகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் எடுத்துக் கூறப்படும். 

அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், நூலகங்களில் உள்ள புத்தகங்களை கையாள்வதற்கு அனைவருக்கும் விரிந்துபரந்த வாய்ப்பினை இது ஏற்படுத்தும் என்று மத்திய கலாசார இணை அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 54,856 பொது நூலகங்கள் உள்ளன. மத்திய கலாசார துறையானது, ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் பொது நூலக அமைப்புகளை ஊக்குவித்தும் ஆதரவு அளித்தும் வருகிறது. இந்த அறக்கட்டளையானத, ஆண்டுதோறும் நாடு முழுவதுமிருக்கும் 6,000 - 7,000 நூலகங்களுக்கு நிதியுதவியை அளித்து வருகிறது.

மத்திய அரசும், கடந்த 2014ஆம் ஆண்டு நூலகங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ், கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் 6 நூலகங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கும் 35 மத்திய நூலகங்கள், 35 மாவட்ட நூலகங்களை மேம்படுத்தும் பணி செயல்படுத்தப்பட்டது.  மேலும், இந்த திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில், 629 மாவட்டங்களில் உள்ள நூலகங்களை இணைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com